"என் வீடியோ என் ஆடியோ".. அண்ணாமலை யாத்திரை செல்லும் நேரம் பார்த்து.. ஷாக் தந்த திமுக! கவனிச்சீங்களா?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக யாத்திரை செல்லும் நேரம் பார்த்து திமுக சார்பாக அவருக்கு எதிராக மிகப்பெரிய சோஷியல் மீடியா டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பாஜகவை வலிமைப்படுத்தும் விதமாக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரத்தில் விழா நடக்க உள்ளது. ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடையை பார்வையிட்டார் அண்ணாமலை.
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' இன்று மாலை துவக்க உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்
திமுக டிரெண்ட்: பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக யாத்திரை செல்லும் நேரம் பார்த்து திமுக சார்பாக அவருக்கு எதிராக மிகப்பெரிய சோஷியல் மீடியா டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக #என்வீடியோ_என்ஆடியோ என்பதை திமுக ஐடி விங் பிரிவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பாஜகவில் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான வீடியோ, ஆடியோ விவகாரங்கள் குறித்து இதில் திமுகவினர் போஸ்ட் செய்து வருகின்றனர். பாஜகவில் வீடியோ, ஆடியோ விவகாரம் வெடித்தது கேடி ராகவன் விஷயத்தில்தான். கேடி ராகவன் பெண் ஒருவருடன் பேசும் ஆபாசமான வீடியோ ஒன்றை அண்ணாமலையிடம் பாஜக நிர்வாகி மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் காட்ட, அதில் அண்ணாமலை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தார்.
கடைசியில் கேடி ராகவன் வீடியோ, இது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ உட்பட அனைத்தும் இணையத்தில் கசிந்தது. இந்த விவகாரத்தில் கடைசியில் கேடி ராகவன் பாஜகவின் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார். அதில் இருந்து மொத்தமாக அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கிறார். அதன்பின் மதுரையில் அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையானது. மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்தால் ஒரு ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம் பற்றிய செய்திகள் அடங்கி போய்.. அமைச்சர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது தலைப்பு செய்தி ஆனது.
இந்த விவகாரம் கையை மீறி போனதால் அண்ணாமலை வேறு வழியின்றி விளக்கமும் கொடுத்தார். அதில், நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். நம்முடைய கட்சி வன்முறையை ஆதரிக்கும் கட்சி அல்ல. அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. வன்முறையை நாம் சொல்லி கொடுக்க போவதில்லை. நமக்கு ஆழமான தேசிய கலாச்சரத்தின் மீது நம்பிக்கை உள்ளது, என்று கூறினார். ஆனால் அதே சமயம் இதை எப்படி அரசியலாக்கலாம் என்று அண்ணாமலை பேசியதாக வெளியான ஆடியோ ஒன்றும் பெரிய சர்ச்சையானது.

இதையடுத்து பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வீடியோ, ஆடியோ கலாச்சாரம் அருவருப்பாக இருக்கிறது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எதிராக லைக் லைக் போட்டு செய்கின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி இவரை பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.
இன்னொரு பக்கம் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவர்கள் இருவருக்குமான ஆடியோ உரையாடல் பாஜகவில் புயலை கிளப்பியது. இந்த ஆடியோவில் கேசவ விநாயகம் பெயர் அடிபட்டது. பாஜகவின் பெண்கள் பதவி பெற பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் புகார் வைக்கப்பட்டது. இதே புகார்தான் கேடி ராகவன் வீடியோ வந்த சமயத்திலும் வெளியானது. அதே விவகாரம் தற்போது திருச்சி சூர்யா விவகாரத்திலும் வெடித்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா தற்போது பாஜகவில் இருந்தும் வெளியேறி உள்ளார். எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் அண்ணாமலையை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்றும் திருச்சி சூர்யா புகார் வைத்து இருக்கிறார்.
இந்த வீடியோ ஆடியோ விவகாரங்களை மொத்தமாக தற்போது திமுக ஐடி விங் வெளியிட்டு அண்ணாமலைக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications