நடந்தாய் வாழி காவிரி! கடல் போல் காட்சியளிக்கும் கேஆர்எஸ் அணை! வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை!
சென்னை: கர்நாடகாவில் உள்ள அணைகளில் கோடையில் தண்ணீர் வறண்டு கிடந்த நிலையில் தற்போது மழையால் முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றில் கட்டப்பட்ட 124 அடி மொத்த கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் தண்ணீரின் வரத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையில்தான் வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் அரிசி உற்பத்திக்கு வித்திடுகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை அழைக்கப்படுகிறது. இங்கு காவிரி நீர் வந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு காவிரி தர வேண்டும் என உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம், என யார் தீர்ப்பு வழங்கினாலும் அதை கர்நாடகா மதிப்பதே இல்லை.
எவ்வளவு மழை பெய்தாலும் பஞ்ச பாட்டு பாடி தண்ணீரை தருவதில்லை. ஆயினும் வருண பகவான் கருணையால் ஓரளவுக்கு மழை பெய்து மக்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். எனினும் நம் உரிமை எப்போது சரிவர, முறையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்றைய நிலவரப்படி (23.5.2024) கிருஷ்ணராஜ சாகர் அணை 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் , ஹாரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதியில் 69.07 நீரும் இருக்கிறது.
இதே நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் ஹரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதி அணையில் 69.07 அடி நீரும் இருப்பு உள்ளது. அதாவது நேற்றைய நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (மே 23) மேட்டூரில் தற்போது 42.7 அடி நீர் இருப்பு உள்ளது. அது போல் பவானி சாகரில் 49.5 அடியும் அமராவதியில் 27.1 அடியும் வைகையில் 39.14 அடியும் மணிமுத்தாறில் 95.25 அடியும் பேச்சிபாறையில் 27.7 அடியும் திருமூர்த்தியில் 38.63 அடியும், சாத்தனூரில் 117.15 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் மேட்டூர் அணை தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வறண்டு வருவது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூரில் நந்தி சிலை வெளியே தெரிவதால் விவசாயிகளும் பொதுமக்களும் கவலையில் உள்ளனர். அது போல் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் தெரிகிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீருக்கு என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து நீர் திறப்பதாக இருந்தது. ஆனால் இப்போதைய சூழலில் மேட்டூர் அணை நீர் திறப்புக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே வேளையில் கர்நாடகாவில் உள்ள அனைத்து முக்கிய அணைகளிலும் இன்னும் குறையவே இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு சில அணைகளில் நீர் இருப்பு வெகுவாகவே குறைந்துள்ளது. உதாரணமாக வைகையில் நேற்று முன் தினம் 114.15 அடி நீர் இருந்த நிலையில் நேற்று 39.14 அடிநீர்தான் இருக்கிறது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications