வைரமுத்துவுக்கு ‛கவிப்பேரரசு’ பட்டம் எப்படி கிடைத்தது? பாராட்டியபடி ஸ்டாலின் கூறிய சுவாரசிய தகவல்
சென்னை: சென்னையில் நடந்த வைரமுத்தியம் எனும் கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். வைரமுத்துவை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின், அவருக்கு ‛கவிப்பேரரசு' என்ற பெயர் கிடைத்ததன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவலை கூறினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைரமுத்தியம் எனப்படும் கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், வைரமுத்துவை பாராட்டி பேசினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிப்பேரரசுக்கு பெருமைசேர்க்கும் விழா மட்டுமில்லை. தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், இலக்கியத்துக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக இது அமைந்துள்ளது. மொத்ததத்தில் வைரமுத்துவை பாராட்ட உலகமே திரண்டு வந்துள்ள உலகளாவிய இலக்கிய திருவிழா. இந்த இலக்கிய திருவிழாவில் பங்கெடுப்பதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக கருணாநிதி தான் நடுநாயகமாக இருந்து வைரமுத்துவின் விழாவை நடத்துவார். வைரமுத்து எழுதிய 17 நூல்களை வெளியிட்ட கைகள் கருணாநிதியின் கைகள். இது அவர்கள் 2 பேருக்கும் இடையே இருக்கும் நட்பின் அடையாளம். முதல் முதலாக 1989ம் ஆண்டில் ‛எல்லா நதிகளும் என் ஓடம்' என்ற புத்தகத்தை கருணாநிதியை வைத்து வெளியிட்டார்.
வைரமுத்து, கருணாநிதியை தனது ஆசான் என்றும், இலக்கிய தந்தை என்றும் அழைப்பார்கள். ஒருமுறை கவிஞர் தந்த புத்தகத்தில் எழுதியிருந்ததை கருணாநிதி மேடையில் வாசித்து காண்பித்தார். ‛என் இலக்கிய தந்தை கலைஞர் அவர்களே, பாண்டிய நாட்டில் கரட்டு காட்டில் காலம் என்னை விதையாய் துப்பியது. சோழ நாட்டு மேகமே நீங்கள் சொறிந்த மழையில் தான் விதைக்குள் இருந்து விருட்சம் வந்தது. இந்த விருட்சம் இன்று உங்களை வணங்குகிறது. உங்களின் இலக்கிய மகன் வைரமுத்து' என்று கையெழுத்திட்டு கொடுத்து இருந்தார்.
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலையும், மகாகவிதை நூலையும் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு தமிழ் கவி உலக கவியாக மாறும் நூல் தான் மகாகவிதை. அதனை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது. பல்வேறு நாட்டு கவிஞர்கள் வந்து பாராட்டுவதை பார்க்கும்போது உலக கவிஞராக வைரமுத்து மாறிவிட்டார் என்று சொல்ல தோன்றுகிறது. அறிஞர்கள், புலவர்கள் பாராட்டும் கவிஞராக வைரமுத்து உள்ளார்.
இதை முன்கூட்டி உணர்ந்து தான் 1999ம் ஆண்டில் "பெய்யெனப் பெய்யும் மழை" கவிதை நூலின் வெளியீட்டு விழாவில் சான்றோர்கள் இருக்கும் அவையில் வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு என்ற பட்டத்தை கருணாநிதி வழங்கினார். அவரது படைப்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு வைரமுத்தியம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. வைரமுத்தியம் என்ற நூலை நான் வெளியிட ஜெகத்ரட்சகன் பெற்று கொண்டுள்ளார்.
கன்னி தமிழ், கற்கண்டு தமிழ், கற்க தமிழ், காந்த தமிழ், காவிய தமிழ் ஆகியவற்றின் மூலமாக மண்ணை, மக்களை, மொழியை, இனத்தை, மானுடத்தை காக்கும் கொள்கைகளை வடித்து கொடுத்ததால் தான் அனைவராலும் பாராட்டப்படும் நபராக வைரமுத்து இருக்கிறார்'' என்று புகழ்ந்தார்.












Click it and Unblock the Notifications