அது என்ன 'சர்வதேச புத்தகக் காட்சி'? - ஸ்டாலின் போட்ட மாஸ்டர் ப்ளான் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் அடையாளமாக மாறியிருக்கிறது, சென்னைப் புத்தகக் காட்சி. ஆனால், அதில் ஓர் அதிரடி மாற்றம். இந்தமுறை அது சர்வதேச புத்தகக் கண்காட்சியாக மாற்றமடைய உள்ளது.
வரும் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் புத்தகச் சந்தை 22 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கிடையில், 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான நாள்களில் அதே மைதானத்தில் 'சர்வதேச புத்தகக் காட்சி'யும் நடைபெற உள்ளது.

அதென்ன புத்தகக் காட்சி, சர்வதேச புத்தகக் காட்சி?
இதற்கான விளக்கம் வாசகர்களுக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள சில பதிப்பாளர்களுக்கும் தேவைப்படுகிறது. பலரும் இந்த வேறுபாட்டை எவ்வளவு தூரம் புரிந்துகொண்டுள்ளனர் என்பது கேள்விக்குறிதான்.
சர்வதேச புத்தக் காட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் 'ஆழி' செந்தில்நாதனிடமே இதுகுறித்து சில விளக்கங்களைக் கேட்டோம்.

புத்தகக் காட்சி என்றால் என்ன?
"வாசகர்கள், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கக் கூடிய இடம்தான் புத்தகச் சந்தை. இது வழக்கமாகச் சென்னையில் வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. அப்படிப் பார்த்தால் இதுவரை 45 ஆண்டுகளாக இந்தக் கண்காட்சி நடந்துள்ளது.
இதில் பதிப்பாளருக்கும் வாசகர்களுக்குமான தொடர்பு மட்டுமே இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதைப் புத்தகங்கள் விற்பனைக்கான ஒரு சந்தை என எடுத்துக் கொள்ளலாம்.

சர்வதேச புத்தக் காட்சி எதற்காக?
சர்வதேச புத்தகச் சந்தை என்பது வெறும் வாசகர்களை மட்டும் மனதில் வைத்து நடத்தப்படும் சந்தை அல்ல; அது சர்வதேச பதிப்பகங்கள் தங்கள் நூல்களின் பதிப்புரிமையைப் பிற மொழிகளுக்கும் பிறநாட்டுப் பதிப்பகங்களுக்கும் விற்பதற்கான ஒப்பந்தங்களைப் போடக் கூடிய களமாகக் கருதப்படுகிறது. அதைத்தான் நாம் சர்வதேச புத்தகச் சந்தை என்கிறோம்.
மேலும், இந்த சர்வதேச புத்தகக் காட்சியில் வெளிநாடுகளில் உள்ள பதிப்பகங்கள் கடைகளைப் போட்டு தங்களின் விற்பனையைச் செய்வார்கள். இதுபோன்ற சந்தை, ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்று வருகிறது. துபாயில்கூட நடந்து வருகிறது.
அண்மையில் ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகச் சந்தைக்குத் தமிழ்நாடு நூலக இயக்குநராக உள்ள இளம்பகவத் உடன் சென்றிருந்தேன். எங்களுடன் பாடநூல் கழகத்தின் கூடுதல் இயக்குநர் சங்கர சரவணனும் வந்திருந்தார். இந்தப் பயணத்தின் நோக்கம் என்பது, சர்வதேச அளவில் ஒரு புத்தகச் சந்தையை தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்பதுதான்.
அங்கு பங்கேற்ற பல சர்வதேச பதிப்பகங்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் நாங்கள் அழைப்பு விடுத்தோம். அவர்களும் உற்சாகத்துடன் ஒப்புதல் அளித்துள்ளனர். அதனடிப்படையில்தான் சர்வதேச புத்தகச் சந்தையை ஏற்பாடு செய்துள்ளோம். இதைத் தமிழ் பதிப்பாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய 'ஆழி' செந்தில்நாதன், ''தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் படைப்புகளுக்கு அரசு உரிய நல்கையை (Translation Grants) வழங்க உள்ளது. முக்கியமாக, வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்கும் பதிப்பாளர்களின் விமானம் மற்றும் தங்குமிட செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது. அந்தவகையில், பல நிறுவனங்கள் வருவதற்கான வழிகள், எளிமையாகி உள்ளன.
மேலும், இந்திய அளவில் செயல்படும் பல முக்கிய பதிப்பகங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளன. இது தமிழ்நாட்டில் உள்ள பதிப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும் சந்தை அல்ல. அதனால்தான், இதை 'சர்வதேச புத்தகக் காட்சி' எனக் குறிப்பிடுகிறோம்.

நாடு கடந்து செல்லும் தமிழ்ப் படைப்புகள்
உலகளவில் இருபதுக்கும் மேலான நகரங்களில் சர்வதேச புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. முன்பே சொன்னதைப் போல அதில் முக்கியமானது ஃப்ராங்பர்ட். அடுத்து லண்டன் மற்றும் பாரீஸ், ஷார்ஜா, பெய்ஜிங் போன்ற நகரங்களைச் சொல்லலாம்.
இந்தியாவிலும் புதுடெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் சர்வதேச புத்தகக் காட்சி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது பெரிய பன்னாட்டுப் புத்தகக் காட்சி வரும் ஆண்டு சென்னையில் நடக்க உள்ளது. இதன் நோக்கம் நமது படைப்புகளை நாடுகளைக் கடந்து எடுத்துச் செல்வதுதான்" என்கிறார்.

புத்தகக் காட்சியில் இலக்கிய திருவிழா
''இதே புத்தகக் காட்சியில் தமிழ்நாடு அரசு இலக்கிய திருவிழா ஒன்றை நடத்த உள்ளது. அதில் மூன்றுவிதமான அரங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெற உள்ளன.
நமது பண்பாட்டு அசைவுகள் குறித்து தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். வருங்கால தலைமுறைக்குத் தமிழ் இலக்கிய அறிமுகங்களைச் செய்து வைக்கும் நோக்கில் பயிலரங்குகள் நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது " என்கிறார் ஆழி செந்தில்நாதன்.












Click it and Unblock the Notifications