தேமுதிக கொடியின் ரகசியம் தெரியுமா? பின்னணி இதுதான்! கொடிநாளில் விஜயகாந்த் கூறிய விளக்கம்!அடசூப்பர்
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை நிறுவினார். ஆண்டுதோறும் பிப்ரவரி 12ம் தேதி தேமுதிக கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை: நடிகராக இருந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை(தேமுதிக) துவக்கி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டுள்ளார். தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் தான் தேமுதிக சார்பில் கட்சியின் கொடிநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சியின் நிறுவனராக விஜயகாந்த் தேமுதிக கொடி பற்றியும், அதில் உள்ள வண்ணங்கள் உணர்த்தும் உண்மை பற்றிய சுவாரசிய தகவல்களை கட்சியினருக்கு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் ஒவ்வொரு வண்ணங்களின் பின்னணியில் உள்ள சூப்பரான விஷயத்தை விஜயகாந்த் விளக்கி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தனது நடிப்பு மற்றும் ஈகை குணத்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களில் ஏராளமான ரசிகர்களை விஜயகாந்த் பெற்றிருந்தார்.
கடந்த 2005ல் தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) எனும் கட்சியை தொடங்கினார். 2006 தேர்தலில் விருதாச்சலத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவான விஜயகாந்த், 2011 தேர்தலில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.

தேமுதிக கொடிநாள் கொண்டாட்டம்
தற்போது அவர் விஜயகாந்த் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் தான் தேமுதிக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேமுதிக கொடிநாள் பிப்ரவரி 12ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தேமுதிகவினர் கொடிநாள் கொண்டாடினார்கள். சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதேபோல் மாநிலத்தின் பல இடங்களில் கட்சி நிர்வாகிகள் தேமுதிக கொடியை ஏற்றி கொடிநாளை கொண்டாடினார்கள்.

விஜயகாந்த் வாழ்த்துமடல்
இந்நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கட்சியினருக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில், ‛‛ கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். தொண்டர்கள் விருப்பத்திற்கிணங்க விஜயகாந்த ரசிகர் மன்றம் அமைத்து, அதன்மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்தது. தெண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000ம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே கட்சி தேமுதிக தான்
இந்த கொடியை தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு இமாலய சாதனை நிகழ்த்தப்பட்டது. கட்சி கொடிக்கு என்று ஒருநாளை அறிவித்து அதனை கொண்டாடும் ஒரே கட்சி தேமுதிக மட்டும்தான். எனவே இந்த கொடிநாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14 ம் தேதி உதயமானபோது, நமது நற்பணி மன்ற கொடி கழக கொடியாக மாற்றப்பட்டது.

கொடியின் ரகசியம் என்ன?
கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்களுக்கு கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும். கொடியில் உள்ள சிவப்பு நிறம் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒரே இனம், ஒரே குலம் என்பதை வலியுறுத்தும். வளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.

கருமை-புரட்சி தீபத்தின் அர்த்தம்
கருமை நிறம் என்பது வறுமை, லஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும் நிறமே கருப்பு ஆகும். மூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிப்பதாகும்.

ஈரோடு இடைத்தேர்தலில்..
தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது நமது கழக கொடியாகும். இந்த இனிய நாளில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டுமு். அதேபோல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலி்ல நாம் அனைவரும் கழகத்தின் வெற்றிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கழக நிர்வாகிளும,் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து இயன்ற உதவிகளை செய்து, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற கட்சியின் கொள்கைப்படி இந்த இனிய கொடி நாளை கழக தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும். லட்சக்கணக்கான உண்மை தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, அரும்பாடுபட்டு, அயராது உழைத்து வளர்ந்தது இந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம். அவர்களுக்கு இந்த கொடி நாளில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் '' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications