கலக்குதே தமிழ்நாடு அரசு.. "இவங்களுக்கெல்லாம்" ஒரேடியா ஏறுதா சம்பளம்..வெளியான மகிழ்ச்சி தகவலை பாருங்க
சென்னை: 100 நாள் வேலை திட்டம் குறித்து, முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

100 நாள் வேலை: இந்த திட்டத்தின்கீழ், குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
அதன்படி தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலித்தொகை ரூ.281-ஆக இருந்தது.. இந்த ஊதிய உயர்வு சமீபத்தில் சட்டப்பேரவையில் உயர்த்தப்பட்டது.. அதன்படி, 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு ஊதியம் ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.. மேலும், கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கும் வந்தது..
முறைகேடுகள்: அதேசமயம், இந்த திட்டத்தில் வேலையே செய்யாமல் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தபடியே இருந்தது.. குறிப்பாக, 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கே வராதவர்களின் பெயரை சேர்த்து, பணத்தை முறைகேடு செய்வதாக புகார் கிளம்பியது.. இதையடுத்து, இந்த புகார்களை தடுக்கவும் தமிழக அரசு முனைப்பு காட்டியது. இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
அதில், "இந்த திட்டம் தொடர்பான புகார்களை தெரிவித்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அலுவலரை நியமிக்கவும், இதன் பொருட்டு குறைகளை தெரிவிப்பதெற்கென கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு: எனவே, பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252152-யை தொடர்புகொள்ளுமாறும், மேலும் இது தொடர்பான மாவட்ட வாரியான குறைதீர்க்கும் அலுவலர்கள் குறித்த விபரங்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை tnrd.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்திருந்து.
அந்தவகையில், ஒருபக்கம் ஊதிய உயர்வு, மறுபக்கம் புகார்களின் மீது நடவடிக்கை என தமிழக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இப்போதுகூட, மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது.
குட்நியூஸ்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் புதிய குடிநீர் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்... அப்போது பேசிய அமைச்சர், "தமிழ்நாடு முதல்வர் மக்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதனை சரியாக செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சோசலிச அரசை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்
சூப்பர் தகவல்: தமிழகத்தில் உள்ள 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்கள் குறித்து 3வது முறையாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலை திட்டத்தில் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதாவது இதுவரை ரூ.210 வழங்கப்பட்ட நிலையில் ரூ. 294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது மீண்டும் உயர்த்தப்பட்டு விரைவில் ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications