"கிங்மேக்கர்" கமல்.. பாஜகவின் B டீமா?.. நொறுங்கும் கணக்குகள்.. எம்.பி.யாவாரா கமல்ஹாசன்.. சபாஷ் ராகுல்
காங்கிரஸ்கூட்டணியிடம், எம்பி சீட்டுகளை கேட்டு காய் நகர்த்தலை துவங்கி உள்ளாராம் கமல்
சென்னை: எந்த நோக்கத்தை முன்வைத்து, ராகுல் காந்தியின், பயணத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார் என்ற கேள்வி இன்னமும் வட்டமடித்தபடியே வருகிறது.. அதேபோல, மநீம கமல்ஹாசனின் தேர்தல் வியூகம் என்னவென்றும் சில தகவல்கள் கசிந்து வருகின்றன.. இந்த நிகழ்வுகளை பாஜக தரப்பு கவனித்தபடியே வருகிறது.
குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார் கமல்..
தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மநீமய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

ஃபேஸ் வேல்யூ
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாருடன் கூட்டணி வைத்து, போட்டியிட்டது. ஆனால், மய்யம் சரிவை நோக்கி போய்விட்டது... வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்டது.. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், வேறு வேறு கட்சிகளுக்கு பறந்துபோய்விட்டனர்.. அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் போன்றவற்றால் கமல் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் விக்ரம் படம் புது தெம்பை தந்தது.. சினிமாவிலும் சரி, அரசியலும் சரி, ஒரு துடுப்புபோல இந்த படம் வந்து சேர்ந்தது.. உதயநிதியின் தொடர்பால், திமுக கூட்டணி என்ற சலசலப்பும் வட்டமடிக்க ஆரம்பித்தது.

ரவுண்டு ரவுண்டு
கடந்த தேர்தலிகளில் பெற்ற சறுக்கல்களை இந்த முறை பெறக்கூடாது என்பதில் கமல் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. இதற்காக முதல்கட்டமாக தன்னுடைய கட்சியை பலப்படுத்த முனைந்து வருகிறார்.. மற்றொருபக்கம் வலுவான கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான், எதிர்கால அரசியலுக்கு நல்லது என்றும் முடிவெடுத்துள்ளார்.. ஆனாலும், கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே பாஜகவின் "பி டீம்" என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.. கட்சி ஆரம்பித்ததும், இந்த விமர்சனம் அதிகமாகி கொண்டேதான் வருகிறது.. பாஜகவின் சாயல் என்ற நிழலை இப்போதுவரை கமலால் முழுமையாக ஒதுக்கி தள்ளவே முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

B டீம்
இந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல்.. அதனாலேயே ராகுலுடன் 'கை' கோரும் சூழலுக்கு ஆளாகி உள்ளார்.. ராகுலின் பயணத்தில் பங்கேற்றபிறகும்கூட, பாஜக பி டீம் என்ற விமர்சனம் இன்னும் அழுத்தமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது.. இதையும் நொறுக்க கமல், நேரடியாகவே மத்திய அரசை விமர்சித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக பேசிய வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார்..

ஷா ஷா
அதில், "ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி, கமல் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்... அதில், "தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும். 75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும்" என்று பதிவிட்டு, பாஜக மீதான தன்னுடைய எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளார்.

அட்டாக் அட்டாக்
ஏற்கனவே கடந்த முறை தேர்தலின்போதும், பாஜகவின் பி -டீம் என்று கமல் மீது விமர்சனம் எழுந்தது.. அப்போதும் ஒரு வீடியோ பதிவிட்டு, மொழி திணிப்பு விவகாரத்தில் அமித்ஷாவை அட்டாக் செய்திருந்தார்.. "பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுத்தரவே முடியாது என்று பல மாநில மக்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும் கலாச்சாரமும். 1950-ல் இந்தியா குடியரசானபோது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த "ஷா"வோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்ககூடாது" என்று பதிவிட்டிருந்தார்.

கசங்கும் தாமரை
இப்படி ஒவ்வொரு முறையும், பாஜகவின் நிழல் தான் இல்லை என்பதையே கமல் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.. இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது. காங்கிரசுடன் கமல் கூட்டணி அதுவும் காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்று கமல் நம்புகிறாராம்.. அதனாலேயே காங்கிரசுடன் கைகோர்க்க கமல் விரும்புவதாக சொல்கிறார்கள்.. கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளாராம்.. அதேபோல, கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று கதர் தலைவர்களும் எதிர்பார்க்கிறார்களாம்..

பிரபல முகம்
கமல் தேசம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், காங்கிரசுக்கு இப்படியான ஒரு முகம் தேவைப்படுகிறது.. அது ராகுலுக்கு வலு சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, கமலை பொறுத்தவரை, கேரள பினராயி முதல் டெல்லி கெஜ்ரிவால் வரை அனைவருடனும் இணக்கமான நட்பை கொண்டிருக்கும்நிலையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க, கமல் முயலலாம் என்றும் சொல்கிறார்கள்.. இந்த முயற்சியைதான், அன்று சந்திரபாபு நாயுடு முன்னெடுத்தார்.. பிறகு மம்தா முன்னெடுத்தார். இப்போது ஸ்டாலினும் முன்னெடுத்து வருகிறார்.. அந்த ரூட்டைதான் கமலும் எடுக்கிறார்.. கமல் தேசம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், அந்தந்த மாநில மொழிகளில் பிரச்சாரமும் செய்து, வாக்குகளையும், ரசிகர்களையும் தன்பக்கம் கவரும் திறமை கூடுதலாக உள்ளது..

கழண்டு விழும்
தேசிய அளவில், கமலுக்கு இது உதவும் என்றாலும், காங்கிரசுக்கும் இது உதவக்கூடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.. அதற்கேற்றவாறு, ராகுலின் சமீபகால அரசியல் மக்களின் மனதை கவர்ந்து வருகிறது.. ராகுல் + கமல் + திமுக + கம்யூனிஸ்ட்கள், விசிக என்ற கூட்டணி உருவாகும்பட்சத்தில், அது பாஜகவுக்கு மிகப்பெரிய சிக்கலை தமிழகத்தில் உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.. கமலுக்கு ஒரு எம்பி சீட்டை ஒதுக்கி, தங்களுக்குள்ளேயே அவரை காங்கிரஸ் இணைத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. இதெல்லாம் நடக்கும்பட்சத்தில், "பாஜகவின் பி டீம்" என்ற பிம்பம், கமலிடம் இருந்து தானாகவே கழண்டு விழுந்துவிடும் என்றும் நம்புகிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications