20 டபுள் டெக்கர் மின்சார பேருந்துகள்.. ஜனவரி இறுதியில் பயணம் தொடங்கும்.. அமைச்சர் சிவசங்கர் அப்டேட்!
சென்னை: சென்னையில் 20 டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்குவதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் விட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து மீண்டும் தனது பயணத்தை ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் பயணிப்பதன் மூலமாக சென்னையின் அழகை இன்னும் அருகில் ரசிக்க முடிந்தது. சென்னையில் தாம்பரம் - பிராட்வே இடையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக இதன் சேவை 2008ல் நிறுத்தப்பட்டது.

குறிப்பாக குறுகிய சாலைகளில் டபுள் டெக்கர் பேருந்தை இயக்குவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் டபுள் டெக்கர் பேருந்தை மீண்டும் கொண்டு வர திமுக திட்டமிட்டது. இதன் மூலமாக சென்னையில் சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக கவர முடியும் என்றும் பார்க்கப்பட்டது. ஏசி வசதியுடன் கூடிய அதிநவீன டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக 20 டபுள் டெக்கர் ஏசி மின்சார பேருந்துகளை வாங்கவும், இயக்கப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகர போக்குவரத்து கழகம் ஒப்பந்தப் புள்ளிகளை கோரி இருக்கிறது. அதன்படி முதலில் சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ஏற்கனவே அடையாறு - மாமல்லபுரம் இடையிலான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது நிறைவடைந்த நிலையில், நாளை சுற்றுலா பயணிகளுக்கான ஒரு டபுள் டெக்கர் பேருந்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த சுற்றுலா தலங்களுக்கு டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதனால் இளைஞர்கள், குழந்தைகள் உட்பட் பலரும் டபுள் டெக்கர் பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், ஜனவரி மாத இறுதியில் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த பேருந்துகளை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications