எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் 6 ஆண்டுகளில் 11,363 சதவீதம் வளர்ச்சி .. முழு விவரம்
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் "மின்னல் வேக வளர்ச்சி" குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் Aalam Gold and Diamonds Pvt Ltd என்ற நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே ரூ.100 கோடிக்கு அதிகமாக வருமானம் ஈட்டியது தெரியவந்துள்ளது.
Recommended Video
திமுக எம்பி ஆர்எஸ் பாரதி கொடுத்த ஊழல் புகாரில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்த 17 பேரில் நிறுவனங்களும்,நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்களும் அடங்குவர். இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வருவாய் மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எப்படி அந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஆலம் கோல்டு
எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான கருதப்படுவதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் Aalam Gold and Diamonds Pvt Ltd என்ற நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டே 100 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 2018-19 நிதியாண்டில் Aalam Gold and Diamonds Pvt Ltd நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த நிதியாண்டிலேயே 106 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது.

கன்ஸ்ட்ரோமோல் குட்ஸ்
அதற்கு அடுத்த வருடமான 2019-2020 நிதியாண்டில் 160.60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 50.21 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதேபோல் constromall goods pvt ltd நிறுவனம் 2018-19 நிதியாண்டில் 0.84 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. அதற்கு அடுத்த வருடமான 2019-2020 நிதியாண்டில் 3.14 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதாது ஒரே ஆண்டில் 273 .81 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.

ஓசூர் பில்டர்ஸ்
constronics india என்ற நிறுவனம் 2014ல் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனம் அடுத்த வருடமான 2015-2016 நிதியாண்டில் 0.86 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 42.11 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. அதாவது 4796 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. இதேபோல் ஓசூர் பில்டர்ஸ் நிறுவனம் 2014ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அடுத்த வருடமான 2015-2016 நிதியாண்டில் 0.93 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 19.61 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. அதாவது 2008.60 தவீதம் வருவாய் உயர்ந்துள்ளது.

சிஆர் கன்ஸ்ட்ரக்சன்
கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் 2012 -2013 நிதியாண்டில் 42.54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2018 -2019ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 453.92 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதாவது 7 வருவடத்தில் 967.04 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. சிஆர் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் 2012 -2013 நிதியாண்டில் 0.38 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2018 -2019ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 43.52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதாவது 7 வருடத்தில் 11363.15 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறை
இதேபோல் ஏசிஇ டெக் மெசினரி, பி.செந்தில் அன்கோ, வரதன் இன்பராஸ்ட்ரக்சர், ஆலயம் பவுண்டேசன், உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கள் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த சொத்து வளர்ச்சி குறித்து திமுக அளித்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் "மின்னல் வேக வளர்ச்சி" குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது, எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான கம்பெனிகள் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 11,363 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications