பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை நடத்திய டி.எஸ்.பி ஜெயராமனின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். கடந்த 1998ல் சார்பு ஆய்வாளராக திண்டுக்கல் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வாளராக பணியாற்றிய ஜெயராம், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பொள்ளாச்சியில் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார்.

அதிரடி ரெய்டு
இந்நிலையில் இன்று திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார்.

குண்டர் சட்டம் ரத்து
கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால், ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் இருக்கும் நிலை உருவானது. இந்த நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் பெற்றோர்கள், குண்டர் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிமுக பிரமுகர்கள்
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி இடமிருந்து சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த ஹேரேன் பால், பாபு (எ) பைக் பாபு மற்றும் அருளானந்தம் ஆகியோர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அருளானந்தம் என்பவர் அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணியை சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

போலீஸ் நடவடிக்கை
அதேநேரம் அரசியலில் தொடர்புள்ளவர்கள் மீது ஆரம்பத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. விஷயம் பெரிதான பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடையேதான், பாலியல் வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications