பொருளாதார நிபுணர் கலையரசனை அதிகாலையில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார நிபுணரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணை பேராசிரியருமான கலையரசனை, இன்று காலை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த வித முறையான ஆவணங்களும் இன்றி சாதாரண உடையில் வந்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று சில மணி நேரங்களில் வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டதாகவும் கலையரசன் குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக டிஜிபி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலையரசன் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை பேராசிரியருமான கலையரசனை போலீசார் சட்ட விரோதமாக இன்று காலை விசாரணைக்கு அழைத்து சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Kalaiyarasan detained by police for questioning early morning What happened

அவரது பெயரில் இருக்கும் போலி கணக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக கலையரசனை அதிகாலை 5 மணியளவில் சாதாரண உடையில் வந்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் பின்னர், சில மணி நேரங்களில் அவரை மீண்டும் வீட்டில் கொண்டு போய் விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலையரசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், எனது வீட்டிற்கு சாதாரண உடையில் மூன்று போலீசார் வந்தனர். தூங்கி கொண்டு இருந்த நான் போலீஸ் கதவை தட்டியதும் எழுந்து கதவை திறந்தேன். எனது பெயரை கேட்டு என்னை உறுதி செய்து கொண்டவர்கள், எனது செல்போனை பறித்துக்கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பாக என்னை விசாரணைக்காக அழைத்து செல்ல வந்ததாக கூறினர்.

ஆனால் அதற்கான எந்த ஒரு ஆவணத்தையும் காட்டவில்லை. பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து பதிவிட்டதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், எனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட கருத்தைத் தான் பதிவிடவில்லை என்று மறுத்த போதும், எனது விளக்கத்தைக் கேட்காமல், காவல் வாகனத்தில் அல்லாமல், வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாடகைக் காரில் என்னை ஏற்றிக்கொண்டு சென்றனர்.

பல்லாவரம் அருகே கார் சென்ற போது சாலையோரம் காரை நிறுத்தி 45 நிமிடங்கள் செல்போனில் பேசினர். பின்னர் என்னை வீட்டில் இறக்கிவிட உத்தரவு வந்து இருப்பதாக கூறி மீண்டும் வீட்டில் வந்து இறக்கிவிட்டனர். திரும்பி வரும் வழியில், எனது புகைப்படம் வைக்கப்பட்டு இருந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட அவதூறு கருத்தின் ஸ்கிரீன் ஷாட்டை காட்டினர். அது என்னுடைய கணக்கு இல்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டனர்.

கடிதம் எழுதி கொடுத்த பிறகு, எனது செல்போனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு காலை சுமார் 7.45 மணியளவில் என்னை வீட்டில் இறக்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட என்னையே, ஒரு குற்றவாளி போல போலீசார் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் வெறும் இன்ஸ்டாகிராம் கணக்கு அல்லது போலி அடையாளத்தை உருவாக்கிய விவகாரம் மட்டுமல்ல என்று நான் அஞ்சுகிறேன்.

எந்தத் தவறும் செய்யாத ஒருவரின் வீட்டுக் கதவை அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் தட்டி, அவரை அழைத்துச் செல்லக்கூடும் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. எனவே, சட்டவிரோதமாக என்னை அழைத்துச் சென்றவர்கள், அவதூறான கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மற்றும் பொதுவெளியில் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பொருளாதார நிபுணரான கலையரசன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தி திராவிடன் மாடல் உள்ளிட்ட நூல்களையும் பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+