திறக்கப்படாத இயக்குநர் அமீர் வீட்டு கதவு.. விடாமல் 20 நிமிடம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்
சென்னை: இயக்குநர் அமீரின் வீட்டிற்கு அமலாக்கத் துறை ரெய்டு நடத்த வந்த போது அவர் வீட்டு கதவுகள் திறக்கப்படாததால் 20 நிமிடங்கள் வரை அதிகாரிகள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீரின் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீடு, அப்துல் பாசித் புகாரியின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார். இந்த சோதனையின் போது எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை திநகரில் உள்ள அமீரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அது போல் சேத்துப்பட்டில் முக்தார் கார்டனில் உள்ள அமீரின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது அவர் வீட்டு கதவு திறக்கப்படாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் 20 நிமிடங்கள் காத்திருந்தனர்.
பின்னர் அவர் வீட்டு கதவு திறக்கப்பட்டதும், தாங்கள் யார், எதற்காக வந்துள்ளார்கள் என்பதை வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குநர் அமீருக்கு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் கடந்த 2ஆம் தேதி அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோர் ஆஜராகினர். அதன்படி டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் அமீர் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மீண்டும் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த 2 ஆம் தேதி அமீரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் சென்னையில் அமலாக்கத் துறையினர் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அதில் அமீரின் வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications