செந்தில் பாலாஜிக்கு ‘ஸ்கெட்ச்’? காலையிலேயே சுற்றி வளைக்கப்பட்ட 3 புள்ளிகள்.. ED ரெய்டில் யார் யார்?
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சிஎஸ் சங்கர் ஆனந்த் வீடு, மற்றும் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு காவலர்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

சங்கர் ஆனந்த்
கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த். இவருக்கு செங்குந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வீடு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ஏற்கனவே செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற போதெல்லாம் சங்கர் ஆனந்த் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் 80 அடி சாலை பகுதி அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் ஆனந்த் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொங்கு சுப்பிரமணி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர் கொங்கு மெஸ் மணி என்கிற சுப்பிரமணி. இவருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சில முறை ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராயனூர் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணி வீட்டில் இன்று சோதனை நடக்கிறது.
சக்தி மெஸ் கார்த்திக்
கரூர் - ஈரோடு சாலையில் அமைந்துள்ள சக்தி மெஸ். இந்த மெஸ்ஸின் உரிமையாளர் கார்த்திக், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர். ஏற்கனவே, சக்தி மெஸ்ஸில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் இவரது வீட்டில் ஈ.டி ரெய்டு நடைபெற்று வருகிறது.
2023 ஆம் ஆண்டு ஏற்கனவே இவர்கள் மூவரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு
கடந்த 2011- 2015 காலகட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகம், அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக
செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டிற்கும் மேலாக விசாரணை கைதியாகவே சிறையில் இருந்தார். பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் செந்தில் பாலாஜி.
அமைச்சரான நிலையிலும் வழக்கு விசாரணைக்கு தொடர்ச்சியாக ஆஜராகி வருகிறார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.












Click it and Unblock the Notifications