அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்க கால அவகாசம் கேட்குமா அமலாக்கத்துறை?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வழங்கப்பட்ட 8 நாட்கள் அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 18 மணிநேர கடும் விசாரணைக்குப் பின் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜி உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். பின் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் நீதிபதி டிஸ்மிஸ் செய்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றமோ, சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவு சரி என தெரிவித்துவிட்டது.
செந்தில் பாலாஜிய விசாரிக்க அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட 8 நாட்கள் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிய காவலில் வைத்து விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications