காவிரி விவகாரத்தில் புரிதல் இல்லை.. பாஜகவை காப்பாற்ற எடப்பாடி பேசுகிறார்.. அமைச்சர் ரகுபதி அட்டாக்
சென்னை: காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை என்றும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி பேசுகிறார் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. இதில், காவிரி நீர் விவகாரம் குறித்து தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்து இருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி நதி நீர் உரிமையை காப்பதில் திமுக எப்போது உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.

கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும் போதும் பாசனத்திற்காக 2 டிஎம்சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் மத்திய அரசு தலையிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தார்.
புரிதல் இல்லை: இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை என்றும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுகிறார் என்றும் கூறினார். இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
இன்றைய தினம் தமிழக சட்டசபையிலே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு கருத்துக்களை, குற்றச்சாட்டுகளை திமுக மீது சுமத்தியிருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் அளிப்பது நம்முடைய கடமை என்ற உணர்வோடு இந்த கருத்துக்களை தெரிவிக்கிறேன். காவிரி விவகாரத்தில் புரிதல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அடிப்படை புரிதல் இல்லாமல் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்.
பாசம் இருக்கத்தானே செய்யும்: கணவனிடம் விவாகரத்து பெற்ற பின்னரும் மனைவியின் மனதின் ஓரத்தில் கணவனின் பாசம் கொஞ்சம் இருக்கத்தானே செய்யும். இது வாடிக்கையான ஒன்று. இதே போல தான் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்தாலும், அதிமுக விலகினாலும் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்யும் பாஜகவை பாதுகாக்கும் எண்ணத்தை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியது அபத்தமாக உள்ளது.
காவிரி வழக்கில் மாதந்தோறும் இவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அதனை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தவதை கண்காணிக்கத்தான் மத்திய அரசின் கீழ் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சரியாக தண்ணீர் திறந்துவிடுகிறதா? என்பதனை கண்காணிப்பதற்காகவே இந்த குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் வேலை: எனவே தண்ணீர் திறந்துவிடுவதை கண்காணிப்பது மத்திய அரசின் வேலையே தவிர.. இதில் கண்காணிப்பது கர்நாடக அரசின் வேலை கிடையாது. மத்திய அரசின் வேலை.. கர்நாடக தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் காவிரி விவகாரத்தில் நேரடியாக மோதிக்கொள்ள கூடாது என்பதால் தான் அதை கண்காணித்து மத்தியஸ்தம் செய்ய மத்திய அரசின் கீழ், காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் இயங்கி வருவது எடப்பாடி பழனிசாமிக்கு உணரவில்லையா..
அபத்தமானது: இல்லை உணர்ந்தும் தீர்மானத்தை மத்திய அரசை மட்டும் குறிப்பிட்டுள்ளதை மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாரா என்பது தான் எனது கேள்வி.. கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு பலமுறை பேசியும் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்பதால் தான் உச்சநீதிமன்றத்தை நாடினோம். காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் ஆகிய இரண்டு அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும். இதை மறைத்து விட்டு பாஜக அரசுக்கு ஆதரவாக திருத்தம் கேட்பது அபத்தமானது.
"இந்தியா" கூட்டணி: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டால் தான் 'இந்தியா' கூட்டணியில் சேர்வோம் என திமுக நிபந்தனை விதிக்காதது ஏன் என்று எடப்பாடி கேள்வி எழுப்பியிருக்கிறார். பெங்களூரில் ஜூலை 18-ம் தேதி இந்தியா கூட்டணியில் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் தானே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்தில் இரண்டாவது பெரிய கட்சி அதிமுக தான்..
அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே நீங்கள் காவிரியில் தண்ணீர் திறந்தால் தான் கூட்டத்தில் பங்கேற்போம் என்று கூறியிருக்கலாமே.. அல்லது நிபந்தனை விதித்திருக்கலாமே... இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில், ஒரே கொள்கைக்காக உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications