அண்ணாமலையை இனிவிடாமல் விளாசுவாரே! காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் முக்கிய பதவி! அறிவித்த எடப்பாடி
சென்னை: அதிமுகவில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு புதிய பொறுப்பு வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு அதிமுக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார். இதற்கிடையே தான் அவருக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதத்துக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இதனை காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்த்தார்,
அதன்பிறகு அவர் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 2023 ஜனவரியில் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார். இருப்பினும் அண்ணாமலையை அவர் விடவில்லை. தினமும் சமூக வலைதளங்களில் காயத்ரி ரகுராம் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் காயத்ரி ரகுராம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது அவர் ‛‛எனது குடும்பத்துக்கும், தமிழகத்துக்கும் நிறைய விஷயங்களை அதிமுக செய்துள்ளது. எனது அப்பா ரகுராம் அதிமுகவுடன் பயணித்தவர். நேரு ஸ்டேடியம் திறப்பு முதல் பல்வேறு பிரசாரத்தில் எனது அப்பா அதிமுகவுடன் பயணித்துள்ளார். அப்படி அப்பா வழியில் அதிமுகவில் இணைந்தது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.
மேலும் அவர் எந்த பதவியையும் கேட்காமல் மனதுக்கு பிடித்து அதிமுகவில் இணைந்ததாகவும், அதிமுகவில் இருந்து கொண்டே மக்கள் சேவையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தான் காயத்ரி ரகுராமுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‛‛அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி துணை செயலாளர் பொறுப்பில் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications