பாஜக ஆடும் ‘கேம்’.. ஓபிஎஸ்ஸை விட டெல்லிக்கு பயந்து நடுங்கும் எடப்பாடி? கூட்டத்துலயே சொல்லிட்டாராம்!
சென்னை : பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இருவரையுமே ஆதரிப்பது போல 'கேம்' ஆடுகிறது என்றும், ஓபிஎஸ், தினகரன், சசிகலா அனைவரையும் விட எடப்பாடி பழனிசாமியே பாஜகவுக்கு பயந்து நடுங்குகிறார், பணிந்து செயல்படுகிறார் என்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதாக ஒருபக்கம் சொல்லப்படும் நிலையில், மத்திய அரசு அனுப்பும் கடிதங்களில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வருகின்றனர். பாஜக இதன்மூலம் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களை குழப்பும் கேள்வியாக இருக்கிறது.
இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள முன்னாள் எம்.எல்.ஏ தனியரசு, இருவரையும் அரவணைத்துக்கொண்டு அதிமுக தொண்டர்களை குழப்பி, பாஜக கபட நாடகம் நடத்துகிறது என்று விமர்சித்துள்ளார். தனியரசு ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு :

எடப்பாடி - தனிக்கட்சி
கேள்வி : அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.. எப்போது அவர் தனிக்கட்சி தொடங்கப் போகிறார்?
பதில் : ஓபிஎஸ் தான் சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமியை தனிக்கட்சி தொடங்கிப்பார் என ஓபிஎஸ் சவால் விட்டுள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுக பலவீனப்பட வேண்டும் என்றும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அவர் தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும். இப்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க வேண்டியதில்லை.

பாஜக கபட நாடகம்
கேள்வி : 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' பற்றி கருத்துக் கேட்டு மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறதே.. முன்னதாக ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கும் ஈபிஎஸ்ஸுக்குதான் அழைப்பு வந்தது. கிட்டத்தட்ட ஈபிஎஸ் கையில் கட்சி இருப்பதைத்தானே இது வெளிப்படுத்துகிறது?
பதில் : இது சட்டத்தை மீறிய அழைப்பாணை தான் இது. எடப்பாடி பழனிசாமியே தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டு கடிதம் வருவதெல்லாம் யாரோ டெல்லியில் இருந்து இயக்குகிறார்கள் அல்லது பாஜக திட்டமிட்டே ஈபிஎஸ்ஸை பகைத்துக் கொள்ளாமல், ஓபிஎஸ் - ஈபிஎஸ் என்ற இரண்டு முனைகளிலும் பயணிக்கிறார்கள். இருவரையும் அரவணைத்துக்கொண்டு அதிமுக தொண்டர்களை குழப்பி, பாஜக கபட நாடகம் நடத்துகிறது. குஜராத்தில் பதவி ஏற்பு விழாவில் ஓபிஎஸ்ஸை மகிழ்வித்தனர். ஏற்கனவே அதிமுகவை பல பிரிவுகளாக சிதறடித்தது பாஜக. அதன் உச்சமாகத்தான் இப்போதும் மாறி மாறி இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி சொன்னது
கேள்வி : பாஜக ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் வைத்து 'கேம்' ஆடுவது ஓபிஎஸ் அணிக்குத் தெரியாதா? ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து பாஜக தயவை நாடி வருகிறார்களே? எடப்பாடி பழனிசாமி தானே துணிந்து எதிர்க்கிறார்..
பதில் : எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட மத்திய பாஜக அரசுக்கு எதிராகவோ, பிரதமர் மோடிக்கு எதிராகவோ பேசியதில்லை. அவரது ஆதரவாளர்கள் சிலர் பாஜகவை கடுமையாக விமர்சித்ததால் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி குறித்து நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். பிற கட்சிகள் பற்றி யாரும் தரக்குறைவாக பேசக் கூடாது, ஓபிஎஸ்ஸை பற்றியும் கண்ணியக் குறைவாகப் பேசக்கூடாது என ஈபிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறார். மோடி அமித்ஷாவின் விருப்பத்தைத்தான் மா.செக்கள் கூட்டத்தைக் கூட்டி சொல்லி இருக்கிறார் எடப்பாடி, மோடி அமித்ஷாவின் நண்பராக இருக்கும் ஓபிஎஸ் பற்றி தரக்குறைவாக பொதுவெளியில் பேசக்கூடாது என்பதுதான் எடப்பாடி சொல்லும் சேதி. பாஜகவை விமர்சித்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மா.செக்கள் கூட்டத்திற்குப் பிறகு விமர்சிக்க மாட்டார்கள்.

பாஜக சொல்வதை கேட்கும் எடப்பாடி
இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசுவதையெல்லாம், அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று சொல்லி தப்பித்து விடலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திலாவது பாஜகவின் கொள்கைகள், போக்குகளுக்கு எதிராக பேசி இருக்கிறாரா? இந்தி திணிப்பை எதிர்த்து, மாநில உரிமைகளை பறிப்பதை எதிர்த்து, தமிழக ஆளுநரை எதிர்த்து ஒரு வார்த்தையாவது ஈபிஎஸ் பேசி இருப்பாரா? கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராகவே இயக்கம் நடத்தும் நிலைக்குச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பலகீனமான தலைவர் தானே? பிழைப்புவாத அரசியல்வாதியான எடப்பாடி பழனிசாமி எப்படி அதிமுகவுக்கு தலைமையேற்று பாஜகவை எதிர்ப்பார்? எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை விடவும் கூடுதலாக பாஜகவை ஆதரிக்கிறார், அவர்களின் சொல்படி கேட்கிறார். அதையே சட்ட ஆணையத்தின் கடிதம் மூலமாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவுக்கு பயந்து நடுங்கும் ஈபிஎஸ்
கேள்வி : பாஜகவை வலிமையாக எதிர்ப்பவர் தான் அதிமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றால், பாஜகவை ஒரு எழுத்து கூட எதிர்த்துப் பேசாத ஓ.பன்னீர்செல்வம் எப்படி அதிமுகவை தலைமை தாங்க தகுதியானவர் ஆவார்?
பதில் : ஓபிஎஸ் வெளிப்படையாகவே நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்கிறார். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை ஏமாற்றமாட்டார், நம்பிக்கை துரோகம் செய்யமாட்டார். வெளிப்படையாகவே இயங்குகிறார். பாஜக தங்களை இணைத்து வைக்கும் என்றே பேசுகிறார். கோட்பாட்டு எதிரி பாஜக என்று எடப்பாடி எப்போதாவது பேசி இருக்கிறாரா? வேளாண் மசோதாவுக்கு ஆதரவாக பாஜகவினரே பேசாத அளவுக்குப் பேசியவர் எடப்பாடி பழனிசாமி. குடியுரிமை சட்டம் விவகாரத்திலும் கட்சியின் இத்தனை ஆண்டுகால நிலைப்பாட்டு எதிராக பாஜகவை ஆதரித்தார். தமிழக ஆளுநர் ரவி சனாதானம் பற்றி பேசுவது பற்றி ஈபிஎஸ் ஏதாவது கருத்து சொல்கிறாரா? எடப்பாடி பழனிசாமி பாஜகவின் எந்த கொள்கை கோட்பாட்டிலும் தலையிடாமல் பயந்து அஞ்சி நடுங்கி அதிமுகவில் ஒரு அணிக்குத் தலைமையேற்று நடத்துகிறார். ஈபிஎஸ், பாஜகவை எதிர்க்கிறார் எனச் சொல்லவே முடியாது.

தொண்டர்களும் பாஜகவை ஆதரிக்கிறார்கள்
கேள்வி : ஓபிஎஸ் பாஜகவை வெளிப்படையாகவே முழுமையாக ஆதரிக்கிறார். ஈபிஎஸ் தரப்பினரே பாஜகவை எதிர்த்துப் பேசி வருகின்றனர். பாஜகவை விரும்பாத அதிமுக தொண்டர்கள் யாரை ஆதரிப்பார்கள்?
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒரு பொருட்டே அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியில் 2 பேர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றாக இணைந்து போராடுகள், அதுதான் ஜனநாயக அமைப்பு. மோடி, அமித்ஷாவின் கண்ணசைவுக்கு காத்திருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் பணியாற்றுகிறார்கள் என்றால் அதிமுக தொண்டர்கள் ஏன் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பாஜகவை எதிர்த்த டிடிவி தினகரன், சசிகலா பக்கம் அதிமுக தொண்டர்கள் நிற்கவில்லை. பாஜகவை எதிர்த்ததால் பல்வேறு வழக்குகளுக்கும், ரெய்டுகளுக்கும் சசிகலாவும் தினகரனும் இரையானார்கள். ஆனால், அதிமுக தொண்டர்கள், பாஜகவின் கைப்பாவையாக இருந்த எடப்பாடி பழனிசாமி பக்கம் தானே ஓடினார்கள்.












Click it and Unblock the Notifications