எஸ்ஐஆர் பணியில் குளறுபடி! தாம்பரத்தில் ஒரே டோர் நம்பரில் 360 வாக்காளர்கள்! எடப்பாடி பழனிசாமி தாக்கு!
சென்னை: தாம்பரத்தில் ஒரே கதவு எண்ணில் 360 வாக்காளர்கள் உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்தில் எஸ்ஐஆர் திட்டம் குளறுபடியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: சுமார் 21 ஆண்டுகளாக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இறந்தவர்கள் அந்த வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்த வண்ணம் இருக்கிறார்கள்.

போலி வாக்காளர்கள் அப்படியே இருந்து வருகிறார்கள். வீடு மாறி சென்றவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று கொண்டே இருக்கிறது. இரட்டை வாக்காளர்கள் நீடித்து வருகிறார்கள்.
ஆர்.கே.நகரில் 44 ஆயிரம் வாக்குகள் முறைகேடாக இடம் பெற்றிருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதை விசாரித்த பின்னர் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. அது போல் கரூரில் கூட நீதிமன்றத்தை நாடியதால் 10 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
திநகரில் கூட பல்லாயிரக்கணக்கானோர் முறைகேடான வகையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதை கண்டறிந்து உரிய முறையில் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம்.
தாம்பரம் சட்டசபை தொகுதி பாகம் எண் 115 காயத்ரி நகர் 3ஆவது தெரு, கதவு எண் 1 இல் மட்டும் 360 வாக்குகள் ஒரே வீட்டில் உள்ளன. அதே தொகுதியில் பாகம் எண் 117இல் மற்றொரு வீட்டில் 150 வாக்குகள் உள்ளன. இது போன்ற குளறுபடிகளை களைய வேண்டும். ஆளும் கட்சி அழுத்தம் கொடுப்பதால் சில ஆட்சியர்களும் மாநகராட்சி ஆணையரும் முறையாக இந்த எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளவில்லை.
இப்படி இருந்தால் முறையாக எப்படி வாக்காளர்களை சேர்க்க முடியும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் முறையாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் சட்டம் ஒழுங்கு எப்படி சீராகும்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை அரசு எதிர்ப்பது ஏன்? மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications