கன்பாஃர்ம்! இருபெரும் கட்சிகளை கழற்றி விடும் இபிஎஸ்! கிறிஸ்துமஸ் கிஃப்ட் இது தானா? ஷாக் ஆன ‘தலைகள்’!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொடர்ந்து தனக்கு தொந்தரவு கொடுத்து வரும் பாஜக மற்றும் திமுக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் பாமகவை கூட்டணியில் இருந்து கிட்டத்தட்ட எடப்பாடி பழனிச்சாமி கழட்டிவிட்டார் எனவும், அதன் வெளிப்பாடாகவே நேற்று நடந்த கிறிஸ்துமஸ் திருவிழா என்கின்றனர் சேலம் ரத்தத்தின் ரத்தங்கள்.
அதிமுக என்றாலே ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் தான் என்று ஆகிவிட்டது. இடையில் இருவரது தரப்பையும் சேர்ந்த சில மூத்த முன்னாள் நிர்வாகிகள் திடீரென திமுக பாஜக தரப்புக்கும் தாவி வருகின்றனர். மூன்றாம் கட்ட நிர்வாகிகள் அடிக்கடி வேறு கட்சிகளுக்கு செல்வதும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் தான் ஓபிஎஸ் இபிஎஸ் விவகாரத்தில் கோவை செல்வராஜ் தாவல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் தீவிரம்
இதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன குறிப்பாக அமித் ஷாவை நேரில் சந்தித்த பிறகு அவருக்கு சாதகமான அம்சங்கள் அரசியலில் நிகழத் தொடங்கி இருக்கிறது. டெல்லி தலைமையின் ஆதரவு இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது அதிமுகவில் மீண்டும் இணைந்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். ஆனால் எடப்பாடி முடியவே முடியாது என விடாப்பிடியாக மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக - பாஜக
இந்த நிலையில் அதிமுக பாஜக இடையிலான உறவும் சுமூகமாக இல்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக தலைமை கூறிவருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். மூன்று பேரும் கட்சிக்குள் வந்தால் தனது நிலைமை என்னவாக மாறும் என்பதை உணர்ந்திருக்கும் அவர் அதற்கு எந்த காலத்திலும் சம்மதிக்க மாட்டார் என்பது தெரிந்திருக்கிறது. இதனால் பாஜகவுக்கு பயந்து அரசியல் செய்வதை விட வெளிப்படையாக எதிர்ப்பு அரசியல் செய்வதே மேல் என வெகுண்டு எழுந்ததாக கூறுகின்றனர் சேலம் நிர்வாகிகள்.

பாஜக தலைமை
அதனால் தான் அமித் ஷா வரும்போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என தைரியமாக கூறினார். இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில் அதற்கடுத்து தொடர்ந்து அஸ்திரங்களை தொடுக்க ஆரம்பித்தனர் இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன் தொடங்கி ஜெயக்குமார் சிவி சண்முகம் கேபி முனுசாமி என பலரும் வெளிப்படையாகவே பாஜகவை விமர்சித்து வந்தனர். குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கடலூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு அதனை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.

பாமகவுக்கு கல்தா
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்துவிட்டு திமுக பாஜகவுடன் கைகோர்க்கப் போகிறது என பேசிய பேச்சு திமுகவில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் பாஜக தலைவர்களை கடுகடுப்பில் ஆழ்த்தியது. இதன் காரணமாகத்தான் முதல் ஆளாக வந்து சி.வி சண்முகத்துக்கு தகுதி இல்லை என வெடித்துக் கிளம்பினார் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி. தொடர்ந்து ஜெயக்குமாரும் இந்த விஷயத்தில் தூபம் போட பாஜக அதிமுக உறவு கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கி இருக்கிறது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா மூலம் பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சிறுபான்மையினர்
தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி, தனபாலன், ஏசி சண்முகம், ஜிகே வாசனுக்கு பதில் விடியல் சேகர் ஆகியோர் அதிமுக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் அதிமுக கூட்டணி தொடர்கிறது எனக் கூறிய பாஜக தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, அதேபோல வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி அதிமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாகும் அரசியல்
இப்படி சிறுபான்மை மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதன் மூலம் பாஜக கூட்டணியில் இல்லை என்பதை ஜெயக்குமாரும் எடப்பாடி பழனிச்சாமியும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர். இதனால் வருங்காலத்தில் அதிமுக கூட்டணியில் பாமக பாஜகவுக்கு இடமில்லை என கிறிஸ்துமஸ் கிப்ட் கொடுத்திருக்கிறார் எடப்பாடி என்கின்றனர். மேலும் வரும் காலங்களில் பாஜக தலைமையை எதிர்த்து தீவிர அரசியல் செய்யவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருவதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications