கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற எம்எல்ஏ எழிலன் தரப்பு மனு: மத்திய, மாநில அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய திமுக எம்.எல்.ஏ. எழிலனின் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறலாகும்.

பொதுப் பட்டியல்
இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976ம் ஆண்டு, மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

எமர்ஜென்சி காலம்
மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன. இது,
கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகள்
கல்வி சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மாநில மக்களின் கல்வித்தேவை, விருப்பம் ஆகியன சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொண்டு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகினார். அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வர முடியாது எனவும், அரசியல் சட்ட நிர்ணய சபையில் இது சம்மந்தமாக கொண்டு வரப்பட்ட திருத்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

மாநில அரசுகளுக்கு அதிகாரம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும் எனவும், மாநிலங்களுக்கு ராணுவம், அன்னிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

பின்னணி என்ன
புதிய இந்திய அரசியல் அமைப்பு 1950ல் கொண்டுவரப்பட்டது. அப்போது, கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த நிலையே நீடிக்க வேண்டுமென அனைத்துக் கல்விக் குழுக்களும் கூறின. இதை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்திரா காந்தியால் 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையின்போது, 26 ஆண்டு கால நடைமுறை மாற்றப்பட்டது. கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இந்திரா காந்தி காலம்
கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் மாநில அரசுகளுக்கும் அதில் மாற்றங்கள் செய்ய சம உரிமை உண்டு. ஆனாலும் மத்திய அரசின் கை ஓங்கி இருப்பதால் மாநில அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையே உள்ளது. அது தான் நீட் தேர்வு தொடங்கி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரங்களிலும் நடைபெற்று வருகிறது. எனவே, மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும். இதைச்செய்யாமல், தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவது கல்வித்தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில்தான், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய திமுக எம்.எல்.ஏ. எழிலனின் தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications