ஒரே நாடு; ஒரே கல்வி.. வெடித்தது புதிய சர்ச்சை.. எச்சரிக்கும் கல்வியாளர்கள்.. எதிர்க்கும் சிபிஎஸ்சி..
சென்னை: கத்திப் போய் வாள் வந்தது என்பார்கள். இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் போய் ஒரே நாடு, ஒரே கல்வி வந்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்திற்கு சிபிஎஸ்சி போர்டு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு, ஒன்றிய அரசு பட்டியலில் உள்ள கல்வி உரிமையை மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

அப்படியான ஒரு சூழ்நிலையில் ஒரே நாடு, ஒரே கல்வி என்ற முயற்சி என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும்? அதனால் நடக்க உள்ள சாதகம் என்ன? பாதகம் என்ன? என்று இரண்டு கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் இருவரும் சாதக அம்சத்தைவிட பாதகம்தான் அதிகம் உள்ளது என்று வாதிட்டனர்.
முதலில் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், "ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு, ஒரே கல்வி பாடத்திட்டம் என்பது நடைமுறைக்கு உதவாத ஒரு திட்டம். அரசியல் என்பது வேறு; கல்வி என்பது வேறு. இந்த இரண்டையும் நாம் ஒன்றாக இணைக்கக் கூடாது.

நம் நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மொழிகள் பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான சிறப்பு, தனித்துவம், இலக்கிய வளம் எல்லாம் இருக்கின்றது. ஆகவே, ஒரே மொழியைப் பாடமாக வைப்போம் என்றால், மற்ற மொழிகளின் செல்வங்களை நாம் இழக்க நேரிடம்.
உதாரணமாக, தமிழ் மொழிக்கு அதிகமாக இலக்கிய செல்வங்கள் இருக்கின்றன. அதைப் போல மேற்குவங்க மொழிக்கு அதிக அளவுக்கு இலக்கிய வளம் உண்டு. இந்த இரண்டு மொழி அளவுக்கு இந்திக்கு இலக்கிய வளம் கிடையாது.

அந்த மொழியை நாம் நாடு முழுவதும் கொண்டு செல்வதால், வேறு மாநிலக் குழந்தை அதற்குச் சற்றும் சம்பந்த இல்லாத ஒன்றைப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது அந்தக் குழந்தையின் அறிவு வளர்ச்சியைப் பாதிக்கும்.
ஒரு குழந்தை அதற்கு அருகாமையில் என்ன சூழல் உள்ளதோ அந்த மொழியைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை.
மயிலாப்பூரில் உள்ள ஒரு குழந்தை அந்தப் பகுதியில் உள்ள விசயங்களை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அதை அடுத்து அக்குழந்தை எங்கே வளர்கிறதோ அந்த மாநிலத்தைப் பற்றியும் அதன் சூழலைப் பற்றியும் கற்றுக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, அக்குழந்தைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத பீகாரைப் பற்றிப் படித்து என்ன செய்யப் போகிறது? அதற்கான தேவை என்ன இருக்கிறது?

உலக அளவில் கல்வி முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஏஐ பற்றி எல்லாம் வெளிநாட்டினர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரத் தொடங்கிவிட்டார்கள். அப்படியான காலத்தில், 'ஒரே நாடு, ஒரே மொழி' என்றும் 'ஒரே நாடு, ஒரே கல்வி' என்றும் நாம் பின்னோக்கிச் சென்று கொண்டுள்ளோம்.
மால்கம் ஆதி சேஷையா 1974களிலேயே, 'இந்தியாவில் சிங்கிள் பாலிசி என்பதைக் கொண்டுவரக் கூடாது. ஏனென்றால், நாம் கலாச்சார ரீதியாக வித்தியாசப்பட்டுள்ளோம். அதைப்போலவே மொழிரீதியாக நாம் வேறுபட்டுள்ளோம். அந்த வேற்றுமையில்தான் நமது ஒற்றுமையே கலந்துள்ளது. அரசியல் லாபத்திற்காக அந்த பன்முகத்தன்மையைக் குலைக்கக் கூடிய வேலையை நாம் செய்யக் கூடாது' என்று சொல்லி இருக்கிறார்.
மனித வளத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவது என்று உலகநாடுகள் எல்லாம் யோசித்துக் கொண்டுள்ளது. அந்தக்காலகட்டத்தில் நமது சிந்தனை அதை நோக்கி இருக்கவேண்டும். ஆனால், நாம் மனித வளத்தைக் கெடுக்கக் கூடிய வழிகளைச் செய்து வருகிறோம்.

நம்மிடம் மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி ஒரு தொலைநோக்குப் பார்வையில்லை. இருக்க இருக்க மக்கள்தொகை என்பது இந்தியாவில் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆனால், உலக நாடுகள் அதைக் குறித்து அதிக அக்கறை காட்டுகின்றன.
ஒரு தனிமனிதனுக்கு நல்ல கல்வி அறிவைக் கொடுத்து அவரை முன்னேற்றினால், அவர் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, வருமானம் ஈட்டி பங்களிப்பு செய்வார். இதுதான் அவர்களின் தியரியாக இருக்கிறது. நம் நாட்டில் ஒரு தனிமனிதனின் கல்வியைக் கொடுக்கும் காரியத்தை அரசியல் லாபத்திற்காகச் செய்துவருகிறார்கள்.
ஆகவே, கல்வியையும் ஓட்டு அரசியலையும் கட்டாயம் நாம் பிரித்து வைக்கவேண்டும். எப்படி உச்சநீதிமன்றம் என்பது தனித்து இயங்குகிறதோ, அதைப்போன்று கல்வியும் சுகாதாரமும் அரசியலைவிட்டுப் பிரிந்து தன்னிச்சையாகச் செயல்பட நாம் அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அவர்களின் எதிர்காலத்திலும் நாம் விளையாட வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து" என்கிறார்.
அடுத்ததாகப் பேசிய கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, "ஒரே நாடு, ஒரே கல்வி என்ற ஒன்றிய அரசின் திட்டம் கண்டிப்பாக ஏற்கத்தக்கது இல்லை. இந்தத் திட்டத்தை சிபிஎஸ்சி போர்டுகூட எதிர்க்கிறார்கள்.
நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரி இல்லை. சுற்றுச்சூழல், அரசியல், நிலப்பகுதி, கலாச்சாரம் என எல்லாம் வித்தியாகப்படுகிறது. மாணவர்களின் புரிந்துகொள்ளும் சக்திகூட வேறுபடுகிறது. வறுமைகூட மாநிலத்திற்கு மாநிலம் வேறு மாதிரி இருக்கிறது.
இவ்வளவு ஏன் ? உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் விகிதாச்சாரம் கூட ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. பல மாநிலங்களில் வறுமைக் காரணமாக உயர்கல்விக்குப் போகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது.

இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஒரே கல்வியை எப்படி வழங்க முடியும்? எல்லோரையும் எப்படி சம அளவில் வைத்து ஒரே மாதிரியான கல்வியைப் போதிக்க முடியும்?
ஆகவே நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம் எப்படிச் சாத்தியப்படும்? அதை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? இதை எல்லாம் உணர்ந்ததால்தான் அந்தக் காலம் தொட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கு என்று தனித்தனியான கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நம் வளர்ச்சிக்கு இதுவே காரணம்.

என்னைப் போன்ற கல்வியாளர்கள், மாநிலத்திற்குக் கல்வி சார்ந்து இன்னும் உரிமையை அதிகப்படுத்தித் தரவேண்டும். அதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று பேசி வருகிறோம்.
ஒன்றிய பட்டியலில் கல்வியை வைத்திருக்காமல் மாநிலப் பட்டியலுக்குக் கல்வி உரிமையை மாற்றச் சொல்லப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அப்படி மாற்றப்படும்போதுதான் கல்வித்தரத்தை இன்னும் கூடுதலாக உயர்த்த முடியும். மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க முடியும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications