வந்தாலும் சுத்த வேஸ்ட்..வாண்டடா வண்டியில் ஏறிய பண்ருட்டி! தனித்து விடப்பட்ட தவெக! கடுகடுப்பில் விஜய்
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விஜய் கூவி கூவி அழைத்தாலும் எந்த கட்சியும் அவருடன் கூட்டணி சேரவில்லை. விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்த்த பாமக - தேமுதிக, அதிமுக - திமுக கூட்டணியில் இணைந்து விட்டன. இந்த நிலையில் முதல் கட்சியாக விஜய்க்கு ஆதரவு தருவதாக அறிவித்திருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆதரவு விஜய்க்கு எந்த வகையிலும் உதவாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆட்சியில் பங்கு கொடுப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்து இருந்தாலும் அந்த கட்சியில் இதுவரை யாரும் சேரவில்லை.
மாறாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் அமைச்சராக பதவி வகித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கடைசியாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம் பெற்று இருந்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
ஆனால், ஓபிஎஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காததால் அங்கிருந்து விலகி எம்.ஜி.ஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அவர் எந்த கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரனின் கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் அதிமுக பொதுச்செயலாளர் ரஞ்சித்குமார் கூறுகையில், 2026ல் விஜய் ஆட்சிக்கு வர வேண்டும். ஊழல் இல்லாத கட்சி என்பதற்காகவே விஜய்யை ஆதரிகிறோம் என்று கூறினார்.
விஜய் அரசியல்
இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனால், விஜய்க்கு எந்த விதமான நன்மையும் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மிகச்சிறிய கட்சிகளாக இருந்தாலும் உதாரணத்திற்கு கொமதேக, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை போன்றவை கொங்கு மண்டலங்களின் அனைத்து கிராமங்களிலும் கிளை அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. பிற மாவட்டங்களில் அவர்களுக்கு கிளைகள் இல்லாவிட்டாலும் மேற்சொன்ன கொங்கு மாவட்டத்தில் அவர்களுக்கு நல்ல அடித்தளம் உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
மேலும் விடுதலை சிறுத்தைகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் கிளை தொடங்கி ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் இருக்கிறார்கள். ஆனால் நேற்று கட்சி ஆரம்பித்த பண்ருட்டி ராமச்சந்திரனை தவிர வேறு யாரையுமே தமிழக அரசியலில் அவ்வளவாக தெரியாது. இதனால் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்தாலும் கட்சி என பார்க்கும்போது விஜய்க்கு பூஜ்ஜியம் தான் ஆதரவு என்கின்றனர்.
தவெக
மேலும் ஜெயலலிதா, விஜயகாந்த், ஓபிஎஸ் ஆகியோருக்கு ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் நேரடியாக தவெகவில் இணைந்தால் அவரது அரசியல் அனுபவம் விஜய்க்கு பயன்பட்டிருக்கும். ஆனால் கட்சியில் இருப்பவர்களே விஜயை சந்திக்க முடியாத சூழல் நிலவும் போது ஆதரவு தெரிவிப்பதால் பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் அனுபவம் விஜய்க்கு எந்த வகையிலும் கை கொடுக்காது என்றும் சொல்கின்றனர்.
விஜய்
அது தெரிந்ததால் தான் வாண்டடாக வந்து வண்டியில் ஏறியது போல விஜய்க்கு ஆதரவளிப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி சொன்னாலும், அதனை வரவேற்று விஜய் மட்டுமல்ல, அவரது கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட பேசவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சொல்லப்போனால் 2026 தேர்தலில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications