மின்சார சட்ட திருத்த மசோதா.. நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்த திமுக.. விளாசிய செந்தில் பாலாஜி!
சென்னை: ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் தனியார் துறைக்கே அதிக பயன் என்றும், ஏழை மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு தான் என்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 18ம் தேதி தொடங்கியது. அவை தொடங்கி நடந்து வந்தாலும், அதே நேரத்தில் அவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் அறிமுகம் செய்தார்.

லோக்சபாவில் மசோதா அறிமுகம்
இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் கூச்சல், அமளிக்கு மத்தியிலும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் மசோதாவை லோக்சபாவில் அறிமுகம் செய்தார். லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
குறிப்பாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தடை ஏற்படலாம். இது போக, மின் கட்டணங்களை இனி தேசிய ஆணையமே முடிவு செய்யலாம். மின்விநியோகம் தனியாரிடம் தரப்படும். நுகர்வோர் தேவையான நிறுவனத்தை தேர்வு செய்யலாம் என பல்வேரு ஷரத்துக்கள் உள்ளன. தனியாருக்கு ஆதரவாக உள்ள இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவுக்கு தி.மு.க எதிர்ப்பு
குறிப்பாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே அதிகப்படியான உரிமை இருக்கும் என்பதால், அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செந்தில் பாலாஜி பேட்டி
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள இந்த மசோதாவின் மூலம் 100 யூனிட் க்கு குறைவாக பயன்படுத்தும் ஏழை குடிசைவாழ் மக்கள், விவசாயிகள், விசைத்தறி தொழிலாளிள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்ட திருத்த மசோதாவால் பறிக்கப்படும். இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். இந்த மசோதாவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தான் 8.12.2012ம் ஆண்டே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். தொடர்ந்து தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும் வகையில் உள்ளதால் நாங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

முழுக்க முழுக்க தனியார்மயம் ஆக்கும் முயற்சிதான்
இந்த மசோதாவின் மூலம் தனியார் துறைகள்தான் அரசின் சலுகைகளை பெறுவார்கள். ஏழை மக்கள் அல்ல. ரூ.1.59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. ஆனால் மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுகவினர் இதுவரை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எதிர்த்து குரல் கொடுக்காத அதிமுக அரசு இதுவரை எந்த ஆர்ப்பாட்டத்தையும் நடத்தவில்லை. எங்களது கடும் எதிர்ப்பின் காரணமாக தான் தற்போது இந்த மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இது மின்சாரத்துறையை தனியார் யமாக்கும் முயற்சிதான். எனவே தான் நாங்கள் ஒன்றிய அரசின் இந்த புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.












Click it and Unblock the Notifications