செம.. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வரம்! சென்னைக்கு அருகேதான்.. முதல்வர் போட்ட கையெழுத்து
சென்னை: செங்கல்பட்டு அருகே ரூ.515 கோடியில் அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் நகரங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், இந்த நகரங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பெரும் சிக்கல்களை உருவாக்குகிறது. வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளும் மேலெழுகின்றன. இந்நிலையில், பெரு நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஒரே இடத்தில் மக்கள் குவியாமல் தடுக்க முடியும்.

அதேபோல திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளின் வேலை வாய்ப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது. சாதாரண இளைஞர்களுக்கே வேலை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் அரசு கொடுக்கும் உதவி தொகைகளை நம்பிதான் நகர்கிறது. இந்நிலையில் இவர்களுக்கான வேலை வாய்ப்பை தனியாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அந்த வகையில் நேற்று செங்கல்பட்டு அருகே ரூ.515 கோடியில் அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் சுமார் 446 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"நுகா்வோருக்கு பொருள்களைத் தயாரிக்கும் 'கோத்ரேஜ்' நிறுவனமானது, இந்தியாவில் 33 இடங்களில் தனது உற்பத்தி அலகுகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் உற்பத்தி மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தமிழக அரசு மற்றும் கோத்ரேஜ் குழுமத்துக்கு இடையே வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிகழ்வு, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலமாக, ரூ.515 கோடி முதலீட்டில் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு அருகே அமையவுள்ள ஆலையின் மூலமாக, சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுறை பராமரிப்பு சாதனங்கள், கொசு ஒழிப்பான் போன்றவை உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த நிறுவனத்தில் 50 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கோத்ரேஜ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மேலும், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications