எத்தனை பேருக்கு போன் போட்டீங்க.. யாரும் வரல.. ஏன் தெரியுமா? - ஓபிஎஸ் ரகசியம் உடைத்த ஆர்பி.உதயகுமார்!
சென்னை : நீங்களும் உங்கள் மகன்களும் எத்தனை பேரை தொலைபேசியில் அழைத்து பேசினீர்கள் யாராவது உங்களுக்கு மதிப்பு அளித்தார்களா என்பதை மட்டும் நீங்கள் மனதை தொட்டு யோசித்து பாருங்கள் என ஓபிஎஸ்ஸை குறிப்பிட்டுப் பேசியுள்ளார் ஈபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
Recommended Video

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏழுமுறை நிலைப்பாட்டை மாற்றியுள்ளீர்கள். இன்னும் எத்தனை முறை நீங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறுவீர்கள் என்று யாருக்கும் தெரியாது, ஆகவே தொண்டர்களும் பன்னீர்செல்வத்தை நம்பி செல்லமுடியாது என்று உறுதியாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு அம்மாவின் அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் விவகாரத்திற்கு இடையே, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

ஒத்துழையாமை இயக்கத் தலைவர் ஓபிஎஸ்
அந்த வீடியோவில் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், "அம்மாவின் அரசை நிலை நிறுத்துவதற்கும் இன்னும் நூறு ஆண்டுகள் மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற எடப்பாடியார் எடுத்துச் செல்கிற அத்தனை முயற்சிகளுக்கும் உடன்படாமல் ஒத்துழையாமை இயக்கத்தை கழகத்தில் நடத்தியவர்கள் யார்? கழக வளர்ச்சிக்காவும், கழக நன்மைக்காகவும் எடுத்த அத்தனை முயற்சிகளையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவர்கள் யார்? சத்தியமாக நீங்கள் சொல்லுங்கள் பொதுக்குழுவை தடை செய்ய நீதிமன்றம் சென்றது யார்? அதன் பிறகு உச்சநீதிமன்றம் சென்று தடையை நீக்கி பொதுக்குழுவை நடத்தலாம் என்ற பிறகு நீதிமன்றம் சென்று இந்த இயக்கத்தை சீர்குலைக்கிற நடவடிக்கையை எடுத்தது யார்?

பகல் கனவு
ஜெயலலிதா பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த இயக்கத்தை நம்மிடம் கொடுத்து விட்டு சென்றார். ஒன்றரை கோடி தொண்டர்களும் இந்த இயக்கத்தை நம்பி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?
நீதிமன்றத்திற்கு நீங்கள் எத்தனை முறை செல்வீர்கள்? உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்வீர்கள் இன்றைக்கு நீங்கள் கிடைத்த தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். நீதியரசர்கள் என்ன தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் யார் விமர்சனம் செய்யவில்ல, அதுக்கு கருத்து சொல்ல நாங்கள் உள்ளே நுழையவில்லை. ஆனால் உணர்வுபூர்வமாக, உளப்பூர்வமாக தொண்டர்கள் அனைவரும் ஒரு தலைமையை ஆதரிக்கும்போது அதை நீங்கள் தடையாணை வைத்து தடுப்பு சுவர் எழுப்பி விடலாம் என்று கனவு கண்டால், அது பகல் கனவாகவே தான் போகும் தவிர எந்த நாளும் நிலைத்து நிற்கிற தடுப்பு சுவராக இருக்காது.

பெற்ற அனுபவம் இதுதானா?
காட்டாற்று வெள்ளம் போல் தன்னெழுச்சியாக தொண்டர்கள் வரும்பொழுது, நீதிமன்றம் மூலம் தடையாணை பெற்று தடுத்துவிடலாம் கனவு கண்டால் நீங்கள் பொதுவாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவம் இதுதானா என எங்களுக்கு இன்றைக்கு சந்தேகமாக இருக்கிறது. இது ஒரு ஜனநாயக இயக்கம். இந்த இயக்கத்திலே தொண்டர்கள் எடப்பாடியாரை முன்மொழிந்து உள்ளார்கள். எந்த இடத்திலும் அவர் இந்த பதவி வேண்டுமென்று சொல்லவில்லை எந்த இடத்திலும் அவர் கோரிக்கை வைக்கவில்லை. அவரின் அரவணைத்து செல்லும் செயல்பாடுகள், ஜாதி மதம் வேறுபாடு இன்றி ஒரு சமதர்ம இயக்கமாக ஒரே நிலைப்பாட்டுடன் அதிமுகவை காப்பாற்ற அத்தனை நடவடிக்கை எடுத்தார், அதை தவிர தன்னைக் காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இதுதான் சத்தியமான உண்மை.

எத்தனை மாற்றங்கள்?
ஆனால் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு எத்தனை மாற்றங்கள். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு முதலமைச்சராக பொறுப்பேற்றார், அதன் பிறகு முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், அதற்கு பிறகு முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்யவில்லை ஒரு குடும்பத்தின் பிடியில் இந்த இயக்கம் சென்றுவிடக்கூடாது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் அம்மா அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தர்ம யுத்தத்தை தொடங்கினார். தனக்கு பதவி இல்லை என்ற நிலை வந்த பிறகு அவர் தொண்டர்களையும், இயக்கத்தையும் பலி கொடுக்க தயாராகி விடுவார். சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு மெஜாரிட்டி நிரூபிக்கும் நிலை வந்த போது ஓபிஎஸ் என்ன நிலைப்பாடு எடுத்தார், அவரிடம் வந்தவர்கள் என்ன நிலைப்பாடு எடுத்தனர். அதிமுக அரசு அந்த நம்பிக்கை தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக, திமுகவுடன் கைகோர்த்து இரட்டை இலை சின்னத்திற்கு எதிர்ப்பாக இரட்டை சின்னத்தில் வெற்றி பெற்று அன்றைக்கு எதிர்த்து வாக்களித்தார்கள்.

அத்தனை முயற்சிகளும் தோல்வி
நீங்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி தான். அதிமுக அரசை தோற்கடிக்கும் முயற்சி தோல்வி, தர்மயுத்தம் தோல்வி நீங்கள் எந்த நிலைப்பாட்டையும் உறுதியாக எடுத்ததில்லை. நீங்கள் எடப்பாடியார் தலைமையில் இணைந்துகொண்டு உங்களை நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு, மறுபடியும் உங்களுக்கு தேவையான பதவியை பெற்ற பிறகு உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கினீர்கள். அப்போது நீங்கள் மௌனமாக இருந்தீர்களே இயக்கத்தை காப்பாற்ற உங்களுக்கு ஞானோதயம் தோன்றவில்லையா? உங்கள் பதவிக்கு ஆபத்து என்றவுடன் உங்களுக்கு ஞானோதயம் தோன்றுகிறது, உங்கள் பதவிக்கு ஆபத்து என்றால் கட்சி தொண்டர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கூறுவீர்கள். இது எப்படி நியாயம்?

இதுவரை ஏழு முறை
உங்கள் பதவிக்கு ஆபத்து என்றால் இந்த கட்சிக்கு ஆபத்து என்று மாயத் தோற்றத்தை உங்கள் எடுபிடிகளை வைத்து உருவாக்கி விடுவீர்கள், இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு உறுதியான நிலைப்பாடா? நாளைக்கு என்ன நிலைப்பாடு இருப்பீர்கள் என்று எந்தத் தொண்டர்களுக்கு தெரியும்? இதுவரை நீங்கள் ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள். எடப்பாடியார் அப்படி அல்ல ஜெயலலிதா இருக்கும்போதும் சரி அவர் இல்லாதபோதும் சரி, அவரது புகழைக் காத்து வருகிறார். இந்த இயக்கத்தை ஜனநாயக இயக்கமாக நடத்தி வருகிறார் எடப்பாடியார். அதில் என்ன உங்களுக்கு வருத்தம் இருக்கிறது? ஏகமனதாக கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு என்ன மன வருத்தம்?

படுத்திய பாடு கொஞ்சமா?
நீங்களும் அதிமுக முகமாக அறியப்பட்டு உள்ளீர்கள் அதனால் தான், 15 முறை எடப்பாடியார் உங்களிடம் உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சி எடுத்தார். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். இன்றைக்கு நீங்கள் அழைப்பு விடுப்பது யாரை ஏமாற்றுவதற்காக, யாரிடம் அனுதாபம் தேடுவதற்காக?
நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதுமா ஓபிஎஸ் அவர்களே, எல்லோரையும் வாழ வைக்க நீங்கள் சிந்திக்க கூடாதா?
எதற்காக நீதிமன்ற படிக்கட்டில் ஏறி தொண்டர்களை சோர்வடையச் செய்தீர்கள், இந்த சட்டப் போராட்டம் எதற்காக அதிமுகவை வலிமைப்படுத்துவதற்காகவா, இல்லை இன்றைக்கு நீங்கள் அதிமுகவை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.

எத்தனை பேரை அழைத்தீர்கள்?
அதிமுகவின் எதிர்காலம் தான் ஒவ்வொரு அதிமுக தொண்டன் எதிர்காலமாகும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் தொண்டனாக நான் கேட்கிறேன் நீங்கள் விடும் வார்த்தை ஒவ்வொன்றும் உண்மை அல்ல, இன்றைக்கு சாரை சாரையாக தொண்டர்கள் வருகிறார்கள் என்பது போல உங்கள் அடிப்பொடிகள் மாய தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன் நீங்கள் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் நீங்கள், எத்தனை பேரை தொலைபேசியில் அழைத்தீர்கள் எத்தனை பேர் நிராகரித்தார்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே நான் விட்டு விடுகிறேன். உங்கள் புதல்வர்களும் எத்தனை பேருக்கு இன்னமும் அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள், அந்த அழைப்பை எத்தனை பேர் புறக்கணித்து உள்ளார்கள், அதை திருப்பி அனுப்பி உள்ளார்கள் என்பதனை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

ஆள் பிடிக்கும் வேலை
ஆள் பிடிக்கும் வேலையை இந்த நிமிடம் வரை எடப்பாடியார் செய்யவில்லை. தன்னெழுச்சியாக எல்லோரும் அவரிடம் சேர்ந்துள்ளார்கள் அவர் இதுவரை யாரிடமும் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்டதில்லை. அதிமுகவை காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், இந்த இயக்கத்தை காப்பாற்ற உழைப்போம், மீண்டும் அம்மா ஆட்சி அமைப்போம். திமுகவின் நிர்வாக குளறுபடிகளை மக்கள் விரோத போக்கை நாம் தோலுரித்துக் காட்டுவோம், என்ற அந்த ஒற்றை இலக்கில் தான் எடப்பாடியார் பயணித்துக் கொண்டிருக்கிறார். அத்தனை மாவட்ட செயலாளர்கள், அத்தனை தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு ,செயற்குழு உறுப்பினர்களும் எடப்பாடியாரை முன்மொழிந்து உள்ளார்களே, நீங்கள் நேரடியாக அழைப்பு விடுத்தும் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. யோசித்துப் பாருங்கள், அதற்கு என்ன காரணம் என்று உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள்.

ஜால்ரா தட்டவில்லை
உங்களோடு இருந்து சேவை ஆற்றியவர்களை உங்களுக்கு கூஜா தூக்க வில்லை என்று, ஜால்ரா அடிக்கவில்லை என்று அவர்களை தூக்கி எறிந்து விட்டு, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பேன் என்று நினைப்பது சர்வாதிகார போக்கு. ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றிய நீங்கள் இன்னும் எத்தனை முறை நிலைப்பாட்டில் மாற்றுவீர்கள் யாருக்கும் தெரியாது. ஆகவே தொண்டர்கள் சொல்கிறார்கள், பன்னீர்செல்வத்தை நம்பி நாங்கள் செல்ல முடியாது, ஒரே நிலைப்பாட்டில் இந்த இயக்கத்தை காப்பாற்றக்கூடிய வகையில் எங்கள் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பயணிப்போம் என்று எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தி வருகின்றனர். நான் யார் மனதையும் காயப்படுத்தி பேசவில்லை, கொச்சைப்படுத்த அவதூறு செய்ய பேசவில்லை இன்றைக்கு ஓபிஎஸ் அடிபொடிகள் அநாகரீகததின் உச்சமாக பேசுகிறார்கள். அது உங்களுக்கே திரும்பும். தென் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு தொண்டர்கள் ஆதரவு கொடுப்பது போல் மாய தோற்றத்தை உருவாக்குவது என்பது ஆண்டிகள் மடம் கட்டுவது போல் ஆகும். இதுசெங்கோட்டையாக இருக்காது.

சட்டப் போராட்டம் தொடரும்
சட்டப் போராட்டம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். தற்போது இரண்டு நீதிபதிகள் அமர்வில் முறையிட்டு இருக்கிறோம். அடுத்து உச்சநீதிமன்றம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் உள்ளது. இப்படி பல்வேறு சட்டப் போரட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். தன் நிலையை மாற்றிக் கொள்பவர் நிலையான தலைவராக உருவாக முடியாது. அம்மாவின் மறைவுக்கு பின்பு ஏழு முறை தனது நிலையை மாற்றிய ஓபிஎஸ் எப்படி தலைவனாக உருவாக முடியும் என்பதை தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கட்சியில் பிளவு இல்லை. நீங்கள் ஒத்துழைமை இயக்கத் தலைவராக உள்ளீர்கள். ஒத்துழைப்பு தரமாட்டேன், உடன்பட்டு பணியாற்ற மாட்டேன் உழைக்க மாட்டேன், வேடிக்கை பார்ப்பேன் விமர்சனம் செய்வேன் என்று சர்வாதிகாரியாக இருக்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications