70 ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் கலைஞரின் வசனம் - திரையுலகின் பாதையை மாற்றிய 'பராசக்தி'!
சென்னை: தமிழ் சினிமா வரலாற்றைப் புரட்டிப் போட்ட திரைப்படம் 'பராசக்தி'. அதுவரை புராணகால கதைக்களங்களால் திணறிக் கொண்டிருந்த திரையுலகைத் திரும்பிப் பார்க்கவைத்தது இந்தப் படம்.

'பராசக்தி'யின் பகுத்தறிவு அலை
பராசக்தியில் ஒலித்த அனல் பறக்கும் வசனங்களைத் தமிழ் சினிமா அதுவரை கண்டதில்லை. அதற்கு முன்னால் பகுத்தறிவு வசனங்களை இவ்வளவு ஆவேசமாக தமிழ்த்திரை பேசியதே இல்லை. நாயகனை 'நாதா' என்றும் காதலியை, 'வதனமே.. சந்திர பிம்பமோ' என்றும் உருகிப் பாடுவதுதான் தமிழ் சினிமா என்பதாக இருந்தது.
திரைத்துறையில் வீசிய பழைய நம்பிக்கைகளை எல்லாம் பராசக்தியின் பகுத்தறிவு அலை மாற்றியமைத்தது. 'கடவுளைச் சரணடைவதே பிறப்பின் புண்ணியம்' என மக்களை நம்ப வைத்துவந்த கட்டுக்கதைகளைக் கொட்டிக் கவிழ்த்தது. இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் பராசக்தி படத்துக்குத் தடைகேட்டு கொதித்து எழுந்தனர். இந்தச் செய்தி, இன்றைய இளைஞர்களின் உலகம் அறியாத ஒன்று.
பராசக்தி படம், மக்களின் மத உணர்வை புண்படுத்துவதாகக் கூறி அதிகாரத்திலிருந்தவர்கள் படத்துக்குத் தடைபோடச் சொன்னார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகும் தடை செய்யக் கோரி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடங்கி வைத்த பெருமை 'பராசக்தி'யையே சேரும்.
ஆனால், அந்தப் பிரசுரங்களுக்கு எல்லாம் மக்கள் மரியாதை தரவில்லை. படத்தின் கதை நேர்மையாக உள்ளதை உணர்ந்த மக்கள் படத்துக்கு அமோக வரவேற்பைக் கொடுத்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான 'பராசக்தி' படம், திரையரங்குகளை நிரம்பி வழியச் செய்தது. வரலாறு காணாத வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.
அறிமுக நாயகனான சிவாஜிகணேசன் ஓவர் நைட்டில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி, நட்சத்திர எழுத்தாளர் என்ற புகழைப் பெற்றார்.
சொல்லப் போனால் திராவிட இயக்கத் தலைவர்களில் அண்ணாவுக்கு முன்பே திரையுலகுக்குச் சென்ற பெருமை மு.கருணாநிதிக்கு உண்டு. இவர் 'ராஜகுமாரி' படத்தின் மூலம் 1947 ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு 'நல்லதம்பி' படத்தின் மூலம் 1949 ஆம் ஆண்டில் சி.என். அண்ணாதுரை கால் பதித்தார்.
ஆக, அண்ணாவுக்கு முன்பே திரையுலகில் மு.கருணாநிதிக்கு செல்வாக்கு உருவானது. ஆனாலும், ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் சுண்டி இழுத்த படமாக பராசக்தியே அவருக்கு அமைந்தது.

கல்கியின் விமர்சனமும் கொதிப்பும்
'பராசக்தி'யின் மூலக்கதையை எழுதியவர் எம்.எஸ்.பாலசுந்தரம். இது நாடகத்துக்காக எழுதப்பட்ட கதை. அது திரைவடிவமாக மாற்றமடைந்தபோது திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக மு.கருணாநிதி அமர்த்தப்பட்டார். அப்போது அவர் 28 வயது இளைஞர். அந்த இளைஞருக்குள் இருந்த சமூக கோபம் திரையில் வசனமாக அதிர்ந்தது.
திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் 'எந்தக் காலத்தில் அம்பாள் பேசினாள்?' என பூசாரியை நோக்கி கேட்கப்பட்ட கேள்வியால், ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்த வசனம் பல வைதீகர்களைக் கொதிப்படையச் செய்யாமல் இருக்குமா? 'உடனே தடை போடு' என்று கிளம்பினர்.
இந்தச் சர்ச்சை எழுந்தபோது வைதீகத்தில் முழு நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் கல்கி படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டி எழுதினார். 'படம் நியாயமாகவே உள்ளது. அனைவரும் பார்க்கலாம்' என விமர்சனம் செய்தார். அந்தக் காலத்தில் கல்கியே ஆதரித்துப் பேசியதால் மற்ற வலதுசாரி ஆள்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்படி 'பராசக்தி' பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றது. படத்துக்கு பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் கவிதை வரிகளும் மு.கருணாநிதி, கு.மு.அண்ணல்தங்கோ, உடுமலை நாராயணகவி, கே.பி.காமாட்சிசுந்தரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார்.
படத்தின் தொடக்கத்தில், '1942 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரில் பர்மாவிலும் தமிழ்நாட்டிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த வருடத்தில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பதாகும்' என அறிவிப்பு செய்யப்பட்டது. போர்க்கால அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துப் பேசியது இந்தப் படம்.

சிவாஜிக்கு நேர்ந்த சிக்கல்
எம்.எஸ்.பாலசுந்தரம் எழுதிய 'பராசக்தி' நாடகம் எந்தளவுக்கு நாடக உலகில் பிரபலம் அடைந்திருந்ததோ அதே அளவுக்கு டி.எஸ்.நடராஜன் எழுதிய 'என் தங்கை'நாடகம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நாடகம் அண்ணன்-தங்கை அன்பை முன்வைத்தது.
அதில், அண்ணனாக நடித்தவர் சிவாஜி கணேசன். இதில் தங்கைப் பாசத்தைச் சரியாக ஏற்று வெளிப்படுத்தி நடித்திருந்ததால் 'பராசக்தி'க்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதனை நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் வேலூர் பி.ஏ.பெருமாள் முதலியாரும் ஏற்றுக் கொண்டார்.
அதற்கான ஆடிஷன் நடந்து திரைப்படமும் படமாக்கப்பட்டது. ஆனால், 'படத்துக்கு சிவாஜியின் முகம் அவ்வளவு பொருத்தமாக இல்லை' என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டதால், சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. 'சிவாஜிக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைப் பயன்படுத்தலாம்' என்றொரு யோசனையும் கூறப்பட்டது. ஆனால், பி.ஏ.பெருமாள் முதலியார் விடாப்பிடியாகச் சிவாஜி கணேசன் பக்கமே நின்றார். படம் மீண்டும் சூடுபிடித்தது. 'பராசக்தி'யில் குணசேகரனாக சிவாஜி தனது முழு பங்களிப்பைக் கொடுத்தார்.
'பராசக்தி' படப்பிடிப்பில் சிவாஜி பேசிய முதல் வசனம் 'சக்சஸ் சக்சஸ்' என்பதுதான். அதற்கு அடையாளமாக சில ஆண்டுகள் முன் படப்பிடிப்பு நடந்த ஏவி.எம்.ஸ்டுடியோவுக்குள் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டது.

தாக்குதலுக்கு ஆளான 'பராசக்தி'
சினிமா உலகில் 'பராசக்தி' ஏற்படுத்திய புரட்சி குறித்து திராவிட இயக்கத் திரைப்பட ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், 1996 ஆம் ஆண்டில் 'எக்னாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் வீக்லி' ஏட்டில் நீண்ட கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரை ஆங்கில அறிவுஜீவிகள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.
அதேபோல், எம்.ஜி.ஆரை பற்றி எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய The Image Trap: M.G. Ramachandran in Film and Politics நூலில் 'பராசக்தி'யின் பகுத்தறிவு பங்களிப்பு பற்றி சில கருத்துகளை எழுதியிருந்தார்.
அதில், 'திமுகவின் ஆரம்பகால கொள்கைகளுக்கு ஏற்ப நாத்திகவாதம், இந்தி எதிர்ப்பு, தமிழ்த்தேசியம், பிராமணிய எதிர்ப்பு ஆகியவற்றைப் பரப்பின. இந்தத் திரைப்படங்களில் விவரிப்புகள் காமுகர்களாக இருக்கும் கோயில் குருக்கள், சாமியார்கள், கல்லாக நிற்கும் தெய்வங்கள், கொடுமைக்கார வடநாட்டுக் கந்துவட்டிக்காரர்கள், வில்லங்கமான பிராமணர்கள் என்று அமைந்திருந்தன.
உதாரணமாக, கோயில் கருவறையில் இளம் விதவை ஒருவரை மானபங்கப்படுத்த முயலும் கோயில் பூசாரியை மு.கருணாநிதியின் எழுத்து 'பராசக்தி'யில் படம் பிடித்துக்காட்டியது.
பிராமணர்களால் கட்டுப்படுத்தப்பட்ட பத்திரிகைகள், மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி ஆகியவற்றால் 'பராசக்தி' கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. ஆனாலும், படம் வெற்றியடைந்தது. வசனகர்த்தா மு.கருணாநிதி, படத்தின் கதாநாயகன் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு நட்சத்திர அந்தஸ்தை இப்படம் பெற்றுத் தந்தது' என்கிறார் பாண்டியன்.

பரப்புரைப் படம்தான்.. ஆனால்?
தன் திரைப்பட ஆய்வுகளுக்காகக் குடியரசுத் தலைவரின் 'தங்கத்தாமரை' விருதைப் பெற்ற எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் 'பராசக்தி' பற்றி சில புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
'இந்தப் படத்தில் லாகூரில் தயாரிக்கப்பட்ட உருது படமான 'அகேலி'யிலிருந்து ஒரு பாடல் எடுத்தாளப்பட்டது. மேலும் 'சுனேஹ்ரே தின்' , 'பாபுல்', 'டோபட்டா' போன்ற இந்திப் படங்களின் மெட்டுக்கள் எடுத்தாளப்பட்டிருந்தன. இந்தப் படம் சம்பந்தமாகத் தணிக்கையில் குறித்து சர்ச்சை எழுந்தபோது, திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தைப் பார்க்க ஒரு சிறப்புக் குழு அமைத்து பிரச்னைகளைத் தீர்த்தது' என்கிறார்.
திரைப்பட ஆய்வாளர் ஆர்.ஆர்.சீனிவாசன் பேசும்போது, ''அண்ணாவின் 'வேலைக்காரி' படத்திலிருந்த பல விஷயங்கள், 'பராசக்தி'யிலும் இருப்பதைப் பார்க்கலாம். 'வேலைக்காரி' அண்ணாவின் திரைப்படம். ஆனால் 'பராசக்தி' திமுகவின் கொள்கையைப் பேசிய திரைப்படம்.
இந்தப் படத்தின் முடிவில் திமுக தலைவர்கள் பேசும் நிஜமான காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. இது திமுகவின் பரப்புரைப் படம். ஆனால் படத்தில் பிரசார தொனியே வெளியே தெரியாது. அதுதான் இதன் சிறப்பு" என்கிறார்.
அரசியல் உலகில் ஏறக்குறை 80 ஆண்டுகளைச் செலவழித்த மு.கருணாநிதி, திரையுலகில் தன் திறமையை நிரூபிக்க வெறும் 5 ஆண்டுகளைத்தான் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தளவுக்கு அவர் சினிமா எனும் ஊடகத்தை முழுமையாகக் கற்றிருந்தார்.
ஆகவேதான் அவரது 'பராசக்தி' 70 ஆண்டுகளைக் கடந்தும் பேசுபொருளாகவே இருக்கிறது. இந்தச் சாதனையை முறியடிக்க இன்னும் யாரும் வரவே இல்லை என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications