வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிய அமமுக.. குக்கருடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை அமமுக இன்னும் அறிவிக்கவில்லை. அதற்கு முன்பாகவே தொகுதியில் குக்கர் சின்னத்துடன் அமமுகவினர் வாக்குகளை சேகரிக்கும் பணியை தொடங்கியிருக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இருந்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

பாஜக முடிவை அறிவிக்கவில்லை
மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழாவும் இன்று நடைபெற்றது. அதேபோல், விருப்ப மனுவையும் பெற தொடங்கியிருக்கிறது. பாஜக இன்னும் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இன்று காலை பேசிய அண்ணாமலை அதிமுகவே கூட்டணியில் பெரிய கட்சி என்று கூறினார். இதனால், சூசகமாக பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் அறிவித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அமமுக போட்டியிட விருப்பம்
தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்து விட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தலில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேட்டி அளித்த டிடிவி தினகரன், இடைத்தேர்தல் தொடர்பாக வரும் 27 ஆம் தேதிக்குள் நல்ல முடிவை அறிவிப்பதாகவும் திமுக வீழ்த்த வேண்டும் என்று உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் அமமுக போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம் என பேசியிருந்தார்.

டிடிவி தினகரன் தான் வேட்பாளரா?
இந்த நிலையில், இன்று அம்மா மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டிடிவி தினகரனே இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்திய நிர்வாகிகள் அது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றினார். இல்லையெனில் டிடிவி தினகரன் அறிவிக்கும் வேட்பாளருக்கு வேலை செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்தவர்கள் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

வீடு வீடாக பிரச்சாரம்
தேர்தலில் நிலைப்பாடு குறித்து இன்னும் டிடிவி தினகரன் அறிவிக்காத நிலையில், குக்கர் சின்னத்துடன் அமமுகவினர் பிரசாரத்தை தொடங்கியிருக்கின்றனர். போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் எந்த சின்னம் ஒதுக்கப்போகிறது என்ற அறிவிப்புக்கு முன்பாகவே குக்கர் சின்னத்துடன் ஈரோடு பெரியார் நகர் சூரம்பட்டி பகுதிகளில் அக்கட்சியின் உடைய மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர் கொடிகள் மற்றும் பேனர்களுடன் வீடு வீடாக சென்று தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினர்.












Click it and Unblock the Notifications