கொளத்தூர் தொகுதியில் திருப்பம் வருமா? 2வது நாளாக இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு! எப்படி நடைபெறும்?
சென்னை: மு.க ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்யும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி எண் 17 மற்றும் 28 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வுப் பணியானது, அடுத்த 5 நாட்களுக்குக்கு நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் போட்டியிட்டர். தவெக சார்பில் விஎஸ் பாபு போட்டியிட்டார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு நடைபெறுகிறது.
இன்று வாக்குச்சாவடி எண் 17 மற்றும் 28 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆணையின் படி தேர்தல் ஆணையம் இந்த பணியினை செய்து வருகிறது. இவிஎம் எந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆய்வானது நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆய்வில் இதுவரை எந்த குளறுபடியும் இல்லை. 100 சதவீதம் துல்லியமாக இருந்தது.
ஆய்வு எப்படி நடைபெறும்?
சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக சீல் வைத்து, பிரத்யேக அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் தற்போது சீல் உடைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் மட்டும் ஆய்வு செய்யப்படும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த கட்சி பிரதிநிதிகளிடம் எடுத்து காண்பிக்கப்படும்.
7 நாட்கள் நடைபெறும்
அதற்கு பிறகு, வாக்குகள் முழுமையாக அழிக்கப்படும். பின்னர் மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இவிஎம் மெஷினின் நம்பகத்தன்மையை பரிசோதனை செய்வதற்காக நடைபெறும் முறையாகும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறினார்.
இந்த ஆய்வுப் பணியானது, ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 7 நாட்களுக்குக்கு நடைபெற உள்ளது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டதால் தமிழகமே உற்று நோக்கியது. இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் இவிஎம் இயந்திரங்கள் சரிபார்ப்பு தமிழகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
