உயர்ஜாதி இடஒதுக்கீடு.. ஸ்டாலின் தலைமையில் கூடியது அனைத்து கட்சி கூட்டம்! அதிமுக “ஆப்சென்ட்”
சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடியுள்ளது.
பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வு முறை நீடித்து வருகிறது. சமூக நீதியை நிலைநாட்டி சாதிய இழிவை அடியோடு ஒழித்து கட்ட இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் என்று இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன.

உயர்சாதியினர்
இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் நன்றாக படித்து நல்ல பணிகளுக்கு சென்று இருக்கிறார்கள். இந்த இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வந்த உயர்சாதியினர், பிற்காலத்தில் தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர்.

பொருளாதார இடஒதுக்கீடு
ஆனால், உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு திராவிட, அம்பேத்கரிய இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது.

திமுக வழக்கு
பொருளாதார இடஒதுக்கீட்டிற்காக அரசியலமைப்பின் 103 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இடமில்லை என திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வெளியிட்டது. அதில், 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

திமுக எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய ஆதரவு தெரிவித்தன. ஆனால், திமுக தரப்பில் இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

அனைத்துக் கட்சி கூட்டம்
இதற்கிடையே உயர்சாதியினருக்கு 10 சதவீதம் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்டியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பங்கேற்ற கட்சிகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், சிபிஐ, மமக, த.வா.க., கொமதேக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

அதிமுக புறக்கணிப்பு
திமுக சார்பில் அமைச்சர் பொன்முடியும் எம்பி வில்சனும் பங்கேற்றுள்ளனர். விசிக சார்பில் திருமாவளவன், எம்பி ரவிக்குமார், மதிமுக சார்பில் வைகோ, சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் சார்பில் நாகை மாலி, சின்னதுரை, சிபிஐ சார்பில் முத்தரசன், நா.பெரியகுமார் மமக ஜவாஹிருல்லா, கொமதேக சார்பில் சின்ராஜ், வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், பாமக சார்பில் பாலு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் அறிவித்து உள்ளதை தொடர்ந்து அவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications