#Exclusive அண்ணாமலை வெறும் மாநில தலைவர் தான்.. நாங்க கண்டுக்கவே இல்லையே.. பொன்னையன் பரபர பேட்டி!
தமிழ்நாட்டில் தங்கள் நிலை என்ன என்பது நிச்சயம் தமிழ்நாடு பாஜகவுக்கு தெரியும் என பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை : "அண்ணாமலை, பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தான், அவர் ஒன்றும் அகில இந்திய தலைவர் கிடையாது. அவர் அவரது கட்சியை இங்கு வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறார். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை கண்டுகொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை." என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி, அதிமுகவில் இணைந்தது அதிமுக - பாஜக இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம் எனக் குற்றம்சாட்டினார் அண்ணாமலை.
இப்படியான பரபரப்பான சூழலில், அதிமுக - பாஜக உறவு பற்றியும், அரசியல் சூழல்கள் பற்றியும் நம்முடன் பேசியுள்ளார் பொன்னையன்.

ஓபிஎஸ் அணியினர்
சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், ஓபிஎஸ் அணியினர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பொன்னையன், "அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை. அதிமுகவின் துரோகிகள், இந்தக் கட்சிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள் சுயநல உணர்வோடு சில விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கலாம். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கைக் கண்டு ஆற்றாமையில் நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் ஒரு கும்பலால் தூண்டிவிடப்பட்ட அந்தச் செயலை நாங்கள் பொருட்படுத்தவில்லை." எனத் தெரிவித்தார்.

வறுமையை சாதகமாக பயன்படுத்தி
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி பற்றிப் பேசிய பொன்னையன், ஆரம்பகட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நான் அங்கு களப்பணியில் இருந்தேன். ஆனால், கடைசி ஒரு பத்து நாட்களில் திமுகவினர் கடைபிடித்த அணுகுமுறை ஜனநாயகப் படுகொலையாக இருந்தது. கிட்டத்தட்ட 60 சதவீத வாக்காளர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வாக்காளர்களை அழைத்து வந்து 3 வேளைக்கும் சாப்பாடு போட்டு, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் சாப்பாடு கொண்டு போகலாம் எனச் சொல்லி, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலில் ஈடுபட்டனர். ஏழைகளின் வறுமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். வாக்காளர்களை நாங்கள் சந்திக்கவிடாமல் முகாம்களில் அடைத்து வைத்தனர். சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றனர். ஓட்டுக்கு 30,000 ரூபாய்க்கு மேல் கொடுத்தனர். இதை நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் நடவடிக்கைகள் எதுவுமே இல்லை.

எலுமிச்சம்பழத்தில் சத்தியம்
ஆயிரம் ஆயிரமாகப் பணம் கொடுத்து, வெற்றிலை, எலுமிச்சம்பழம் மீது சத்தியம் வாங்கினர். எலுமிச்சம்பழத்தில் சத்தியம் செய்துவிட்டால் வாக்கு தவறக்கூடாது, தவறினால் குடும்பத்திற்கு ஏதேனும் நடந்துவிடும் என்று கருதும் மக்களிடம், வாக்குகளை அறுவடை செய்துகொண்டார்கள். ஏழ்மையைப் பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்துகொண்டார்கள். ஜனநாயக விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட திமுகவின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர், மக்கள் சத்தியம் செய்ததால் வாக்குகளைப் பெற்றார். அபத்தமான முறையில் அவர்கள் பெற்றது வெற்றியே இல்லை. நாங்கள் 43 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பதுதான் அபரிமிதமான வெற்றி. ஏழ்மை தோற்றது, பணநாயகம் வென்றிருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலம் முதல், இந்தியாவிலேயே வீட்டுக்கு 30,000 ரூபாய் கொடுத்து நடந்த தேர்தல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தான்.

பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவும் சரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சரி, சிறந்த முறையில் பணியாற்றினார்கள். தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பு எங்களுக்கு மனப்பூர்வமாக இருந்தது. இஸ்லாமிய வாக்குகள் பாஜக உடனான கூட்டணி காரணமாக சற்று அதிகமாகவே குறைந்திருக்கலாம். ஓரளவுக்கு பெண்கள் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்தன. பாஜகவின் கொள்கை வேறு, எங்களுடைய கொள்கை வேறு. அதிமுக என்பது சாதி, மத பாகுபாடுகளைப் பார்க்காத இயக்கம். எடப்பாடி பழனிசாமி அந்த வழியிலேயே செயல்படுகிறார். இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த பிரிவினராக இருந்தாலும் சரி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு ஈடேற்றவேண்டும் என்பதுதான் அதிமுகவின் நோக்கம்.

பாஜக எவ்வளவு ஓட்டு வாங்கியது?
ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை நாங்கள் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. பாஜக் வேறு நாங்கள் வேறு என்பதை படிப்படியாக சிறுபான்மையினர் உணர்வார்கள். அதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அதிமுக - பாஜக நட்புறவு தொடர்கிறது. பிரதமர் மோடி நல்ல முறையில் நாட்டை ஆள்கிறார். பாஜகவில் இருந்து நிர்வாகிகளை நாங்களாக எங்கள் கட்சிக்கு வரச் சொல்லவில்லை. இன்னொரு கட்சியில் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகளை தேடித்தேடி கண்டுபிடிப்பது எங்கள் வேலை அல்ல. அவர்கள் என்ன பேசினார்கள் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. வந்தார்கள்.. கட்சியில் சேர்த்துக்கொண்டோம் அவ்வளவுதான். அதிமுக செல்வாக்கான இயக்கம். பாஜக சென்ற தேர்தலில் எந்தளவு வாக்குகளைப் பெற்றது, உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று எவ்வளவு வாக்குகளைப் பெற்றது என்று பாருங்கள். பாஜக ஐடி விங்கில் இருந்து சிலர் வந்ததால் தான் எங்கள் கட்சி வளரும் என்று இல்லை. இது திட்டமிட்டு பரப்புகின்ற சூழ்ச்சி.

அண்ணாமலை மாநில தலைவர் தான்
பிரதமர் மோடியின் திறமைமிக்க ஆட்சியை நாங்கள் எப்போதுமே பாராட்டுகிறோம். தமிழ்நாட்டு நலனுக்கு மாறாக பாஜக செயல்பட்டால் அதனை எதிர்ப்போம். அண்ணாமலை, பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தான், அவர் ஒன்றும் அகில இந்திய தலைவர் கிடையாது. அவர் அவரது கட்சியை இங்கு வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறார். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை கண்டுகொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சியில் 95.5% பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக இருக்கின்றனர். அண்ணாமலை ஓபிஎஸ்ஸுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று கூறியிருந்தால், அவர் சற்று ஆராய்ந்து பேச வேண்டும். பாஜக இங்கு எத்தனை தொகுதிகள் வென்றது, எவ்வளவு சதவீதம் வாக்குகள் பெற்றது, தமிழ்நாட்டில் தங்கள் நிலை என்ன என்பது கட்டாயம் தமிழ்நாடு பாஜகவுக்கு தெரியும். எனவே, அதிமுகவும் பாஜகவும் ஒரே நிலையில் இல்லை.












Click it and Unblock the Notifications