#Exclusive அண்ணாமலையின் பெரிய ‘ஆட்டம்’.. வார் ரூம் இருக்கு.. ஆனா சாக்கடை இல்ல.. எஸ்.ஆர்.சேகர் பேட்டி
சென்னை : "எதிர் கருத்து பேசுபவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த பாஜக 'வார் ரூம்' ஒன்றும் சாக்கடை அல்ல. சந்தனம் மணக்கும் சிந்தனையாளர்கள் ரூம்." என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஆர்.சேகர், அண்ணாமலை பெரிய ஆட்டம் ஆடப்போகிறவர். அண்ணாமலை இதுபோன்ற சிறிய இடைத்தேர்தலில் களமிறங்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை மீதான குற்றச்சாட்டுகள், அவர் சீனியர்களை ஓரங்கட்டுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார் எஸ்.ஆர்.சேகர். அவரது பேட்டி பின்வருமாறு:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி
கேள்வி : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் திட்டம் என்ன? கூட்டணி தொடர்பாக என்ன முடிவை எடுத்திருக்கிறீர்கள்? இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் பணிக்குழுவை அமைத்தது ஏன்?
பதில் : தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது, திமுக கூட்டணியை மண்ணைக் கவ்வச் செய்வதுதான் பாஜகவின் திட்டம். தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவின் முடிவுக்கு பாஜக கட்டுப்படும். முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது அதிமுக தான். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், பாஜக சார்பில் உடனடியாக அவரது வெற்றிக்காகப் பணியாற்றத் தொடங்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. இது பாஜகவின் ஸ்டைல். வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே களப்பணியைத் தொடங்கிவிடுவோம்.

உள்நோக்கம் இல்லை
கேள்வி : கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பாஜக இதற்கு முன்பு இதுபோல குழு அமைத்து களத்தில் தேர்தல் பணியாற்றி இருக்கிறதா? இது அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியா?
பதில் : பாஜக அப்படி பணியாற்றி இருக்கிறது. இதேபோல பெரிய அளவுக்கு வேலை பார்த்திருக்கிறதா என்றால், இளம் தலைமையாக அண்ணாமலை வந்தபிறகு மைக்ரோ மேனேஜ்மெண்ட், லாங்-டெர்ம் ஸ்ட்ரேட்டஜி தீர்மானித்து வைத்திருக்கிறோம். இந்த வியூகங்களைச் செய்வதற்கான வலிமை இப்போது எங்களிடம் அதிகரித்துள்ளது. மற்றபடி, பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றுவதில் எந்தவித உள்நோக்கமோ, ரகசியமோ இல்லை.

அண்ணாமலை களமிறங்குவாரா?
கேள்வி : ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்கான வாய்ப்பு அமைந்தால் பாஜக போட்டியிடுமா? அண்ணாமலை களமிறங்குவாரா?
பதில் : நிச்சயமாக பாஜக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், அதை செயல்படுத்தி வெற்றி பெறும் வல்லமை பாஜகவுக்கு இருக்கிறது. யாரை கூட்டணி வேட்பாளரை நிறுத்தினாலும் இதே உணர்வோடு அவரை வெற்றி பெறச் செய்வதற்கு பாஜக பணியாற்றும். அண்ணாமலை இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் அண்ணாமலை உள்ளூர் கபடி குழு வீரர் அல்ல. அண்ணாமலை ஒலிம்பிக் கபடி குழு தலைவர் ரேஞ்சில் உள்ளவர். அண்ணாமலை பெரிய ஆட்டம் ஆடப்போகிறவர். அண்ணாமலை இதுபோன்ற சிறிய இடைத்தேர்தலில் களமிறங்கமாட்டார்.

பாஜக வார் ரூம் - சந்தனம் மணக்கும்
கேள்வி : பாஜகவில் இருந்து வெளியேறும் பலர் வைக்கும் குற்றச்சாட்டு, பாஜகவில் ஒரு 'வார் ரூம்' செயல்படுகிறது. அண்ணாமலைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது ஆன்லைன் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?
பதில் : இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க போலியானது. காரணம், இந்த வார் ரூம் என்பது பரபரப்பான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு அலுவலகம் தான். இன்றைய செய்திகள் என்ன, இதற்கு எதிர்வினை என்ன, எதிர்க்கட்சிக்கு எதிரான பிரச்சனைகள் என்னென்ன என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி மக்களுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு இடம் தான் வார் ரூம். இதுமாதிரி எதிர் கருத்து பேசுபவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த அது ஒன்றும் சாக்கடை அல்ல. சந்தனம் மணக்கும் சிந்தனையாளர்கள் ரூம். இந்த வேலையை திமுக ஐடி விங்கில் வேண்டுமானால் செய்வார்கள், நாங்கள் இதையெல்லாம் செய்வதில்லை.

ரகசியமாக கேளுங்கள்
கேள்வி : தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பாஜகவில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வந்திகொண்டிருக்கிறதே?
பதில் : சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். நாம் அனைவரும் புதிதாக கட்சிக்கு வருபவர்களை முழுதாக கைநீட்டி வரவேற்க வேண்டும் என்று சொன்னார். அவர் என்ன சீனியர்களை மதிக்காமலா இருக்கிறார்? நான் கட்சியின் ஆரம்பகாலம் முதல் உறுப்பினர். எனக்கு அண்ணாமலை நல்ல மரியாதையைத்தானே கொடுக்கிறார்.. அலுவலகத்திற்குள் வரும்போது கூட அத்தனை பேரையும் பார்த்து வணக்கம் சொல்வார் அண்ணாமலை. பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம் ரகசியமாக வேண்டுமானாலும் கேளுங்கள். அத்தனை பேருமே இத்தனை நாளாக இருக்கும் நம் கனவை நிறைவேற்ற ஒரு இளைஞர் கிடைத்திருக்கிறாரே என்று மகிழ்ச்சியுடன் தான் வரவேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications