அன்பழகன், வசந்த குமார், பிரணாப் முகர்ஜி.. 2020ல் திடீரென தவிக்கவிட்டு போன தலைவர்கள்
சென்னை: 2020ம் ஆண்டில், பல முன்னணி அரசியல் பிரமுகர்கள், எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். அதில் பலரும் கொரோனா தாக்கி உயிரிழந்தனர்.
குடும்பத்தினர் மட்டுமல்லாது, நாட்டு மக்களும், அந்தந்த மாநில மக்களும், மறக்க முடியாத மோசமான நிகழ்வுகளாக அமைந்த அரசியல் பிரமுகர்களின் ஒரு பட்டியல் இதோ.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்ற வேண்டுதலோடு இதை பாருங்கள்.

அன்பழகன்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் ஜூன் 10ம் தேதி காலமானார். அவருக்கு வயது 62. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டசபை உறுப்பினர் ஜெ. அன்பழகன்தான். சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் அவர் இருந்தார்.

வசந்தகுமார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் ஆகஸ்ட் 28ம் தேதி காலமானார். 70 வயதான வசந்தகுமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்டு 10ம் தேதி சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்த முதல் எம்.பி. வசந்தகுமார்தான்.

பிரணாப் முகர்ஜி
காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி 2012-2017 வரை இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பணியாற்றினார். ஆகஸ்ட் 10ம் தேதி, பிரணாப் முகர்ஜி தனது மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்துகொள்ள டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனா தொற்று அவருக்கு இருப்பது உறுதியான நிலையில், பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31ம் தேதி அவரது 84 வயதில் இறந்தார்.

ராம் விலாஸ் பாஸ்வான்
பீகாரைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், பிரதமர் நரேந்திர மோடி அரசில் அமைச்சராக இருந்தவருமான, ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8 ஆம் தேதி தனது 74 வயதில் காலமானார். பாஸ்வான் இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த சில வாரங்களில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அகமது படேல்
அகமது படேல் மூத்த காங்கிரஸ் தலைவராகவும், எம்.பியாகவும் இருந்தவர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக இருந்தார். நவம்பர் 25ம் தேதி, தனது 71 வயதில் காலமானார். கொரோனா காரணமாக, உடல் உறுப்பு செயலிழந்ததால் அகமது பட்டேல் இறந்தார். 2004 மற்றும் 2014 க்கு இடையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், அரசுக்கும் கட்சிக்கும் இடையே பாலமாக இருந்தவர் அகமது பட்டேல்.

தருண் கோகாய்
அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய், கோவிட் -19 பாதிப்பால் நவம்பர் 23ம் தேதி உயிரிழந்தார். தருண் கோகோய், 2020 ஆகஸ்ட் 26 அன்று கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தருண் கோகாய் உயிரிழந்தார்.

அமர் சிங்
முன்னாள் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அமர் சிங், சிங்கப்பூரில் தனது 64 வயதில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலமானார். 1956 ஆம் ஆண்டில் அசாம்கரில் பிறந்த சிங், பிரபல பாலிவுட் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகளில் ஒருவர். அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் நிலை உருவானபோது, சமாஜ்வாடி கட்சி அதன் 39 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை காப்பாற்றியது.