FLASHBACK 2021: அன்னை தமிழில் அர்ச்சனை.. கோவில்களில் தமிழில் ஒலித்த வேதம்..நெகிழ்ந்துபோன பக்தர்கள்!
சென்னை: நமக்கு பல வகையில் துன்பங்கள், இன்பங்கள் என்று கொட்டி கொடுத்த 2021-ம் ஆண்டு விடை பெற போகிறது. இந்த வருடத்தில் நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்கள், சோக விஷயங்கள் நடந்துள்ளன. இந்த வகையில் தமிழக அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திருப்பி பார்க்க வைத்தது. அதனை இப்போது காண்போம்.
Recommended Video
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவாகும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் 1970-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது இந்த திட்டம் சிறிய அளவில் அமல்படுத்தப்பட்டது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு விரிவுபடுத்தி மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தார். ஆக்ஸ்ட் 14-ம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் பிறகு அவர்கள் பல கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்துக்காக தமிழக அரசுக்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்தன.

அன்னைத் தமிழில் அர்ச்சனை
இதற்கு முன்னதாக 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு அன்று முதல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகின்றன.

இனிய தமிழில் வேதம்
இதுவரை சமஸ்கிருதத்தில் புரியாமல் கேட்ட வேதத்தை, திருபாடல்களை இனிய தமிழில் கேட்டதால் கோவிலுக்கு சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போனார்கள். இனி அனைவரும் வேதம் படிக்க தங்களை தயார் செய்துகொள்ள இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளதாகவும் பக்தர்கள் பலரும் பூரிப்புடன் கூறினார்கள்.

முதல் பெண் ஓதுவார்
இதில் மிகப்பெரிய ஹைலைட் என்னவென்றால் சுஹாஞ்சனா என்பவர் ஓதுவாராக நியமிக்கப்பட்டதுதான். ஏனெனில் இவர்தான் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டவர். செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனா, தமிழில் 'சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்து தமிழக மக்கள் நெகிழ்ந்து போனார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.












Click it and Unblock the Notifications