முதுகில் குத்திய காங்கிரஸ்.. ஸ்டாலின் கொடுத்த ப்ரீ ஹேண்ட்.. அடித்து தூக்கிய திமுக தலைகள்.. போச்சு
சென்னை: தமிழக அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸின் இந்த முடிவை கடுமையாக விமர்சிக்க கட்சி நிர்வாகிகளுக்கு முழு சுதந்திரம் (Free Hand) வழங்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் காங்கிரஸை "துரோகி" என்றும் "முதுகில் குத்துபவர்கள்" என்றும் மிகக்கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.
அண்ணாதுரை பாணியில் தொடங்கிய அட்டாக்
தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களிலேயே, டிவி விவாதங்களில் பங்கேற்ற திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, காங்கிரஸை 'முதுகில் குத்துபவர்கள்' (Backstabbers) என்று பகிரங்கமாகச் சாடினார். "திமுகவின் தோளில் ஏறி சவாரி செய்து 5 இடங்களை வென்றுவிட்டு, இப்போது அதே தோளைக் காங்கிரஸ் வெட்டுகிறது. திமுக என்ற பெரிய ஆலமரம் இல்லையென்றால், தமிழகத்தில் காங்கிரஸால் ஒரு இடத்தில் கூட வென்றிருக்க முடியாது. இது அப்பட்டமான துரோகம்," என அவர் ஆவேசப்பட்டார்.
மேலும், "ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவர் தலைவர் ஸ்டாலின். ராகுல் காந்தியின் அரசியல் கிராஃபை உயர்த்தியது திமுகவின் உழைப்புதான். ஆனால், தேர்தல் முடிந்த மறுநாளே எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு, விஜய்யிடம் காங்கிரஸ் தஞ்சம் புகுந்துவிட்டது," என்று திமுக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஸ்டாலினின் 'சைலண்ட்' சிக்னல்
இதுவரை கூட்டணி தர்மத்திற்காகக் காங்கிரஸின் பலவீனங்களைப் பொறுத்துக் கொண்டிருந்த ஸ்டாலின், இப்போது அக்கட்சியைக் கடுமையாக விமர்சிக்கத் தனது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சியின் வாக்கு வங்கி சிதறாமல் இருப்பதை உறுதி செய்யவும், தொண்டர்களின் கோபத்தைப் பிரதிபலிக்கவும் இந்த 'ஃப்ரீ ஹேண்ட்' கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
"60 ஆண்டுகால உறவை ஒரே நாளில் காங்கிரஸ் துண்டித்துவிட்டது. இனி அவர்களுக்குத் திமுகவின் அன்பிற்கு இடமில்லை" என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜய்யின் தவெக கட்சி பாஜகவின் நிழல் என்று திமுக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற கொள்கை பேசும் காங்கிரஸ் எப்படி அவருடன் இணையலாம் என்ற கேள்வியையும் திமுக எழுப்பியுள்ளது.
பின்னணி என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களுடன் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதற்குப் பிரதிபலனாக அமைச்சரவையில் பங்கு கோரவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
திமுகவின் முக்கிய குற்றச்சாட்டுகள்:
அரசியல் நாகரிகமின்மை: தேர்தல் முடிந்து ஒரு நாளில் கூட்டணி மாறுவது அரசியல் தர்மத்திற்கு எதிரானது.
சுயநலம்: அமைச்சரவையில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகப் பழைய நட்பைத் தூக்கியெறிந்துவிட்டது காங்கிரஸ்.
இந்தியா கூட்டணிக்கு ஆபத்து: தமிழகத்தில் காங்கிரஸின் இந்த முடிவு தேசிய அளவில் இந்தியா (INDIA) கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே (அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்றோர்) பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
இதையடுத்து குறிப்பாக, வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸைத் தனிமைப்படுத்தத் திமுக வியூகம் வகுத்து வருகிறது. காங்கிரஸ் இல்லாமலும் வென்று காட்டுவோம் என்று காட்ட திமுக காய் நகர்த்தி வருகிறது.
"தமிழகத்தில் காங்கிரஸிற்கு முகவரி கொடுத்ததே திமுகதான். இனி அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்ப்போம்" என திமுகவின் மூத்த நிர்வாகிகள் சவால் விடுத்துள்ளனர். மொத்தத்தில், தமிழக அரசியல் வரலாறு காணாத ஒரு பெரும் 'கூட்டணிப் போரை' நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications