யாரையோ நம்பி போகாதீங்க..என் பின்னால் நம்பி வாங்க! கல்வி, வேலை பெற்று தருகிறேன்.. அழைக்கும் அன்புமணி!

வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா மாநாடு நடத்தப்படுவது வழக்கம். 1988 இலிருந்து 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில் 2013-ல் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 21 வது ஆண்டாக நடைபெற்றது.
லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வன்னிய சங்கத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டுக்கு வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநாட்டு திடலுக்குள் வர முடியாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நடந்தே மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர்.. மாலை நான்கு முப்பது மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. அதில் வன்னியர் சங்கம் உருவான வரலாறு மற்றும் சித்திரை பெருவிழா மாநாடு தொடர்பான பாடல் உள்ளிட்டவற்றுக்கு நடனங்கள் ஆடி கலை குழுவினர் அசத்தினர்.
பிறகு முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள், மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் படங்கள் வானில் ட்ரோன் ஷோ மூலமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான பிரோன்களை பயன்படுத்தி பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் வானில் தோன்ற வைத்து அசத்தப்பட்டது. அதனைக் கண்ட கூட்டத்தினர் ஆர்ப்பரித்து கைதட்டினர்..
குறிப்பாக முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பெயரை சொன்னபோதும் அவர் புகைப்படம் தோன்றியபோதும் மிக அதிகமான கைத்தட்டலும் ஆர்ப்பரிப்போம் இருந்தது. தொடர்ந்து மாநாட்டில் பேசிய அன்புமணி," என்னுடைய அண்ணன் காடுவெட்டி குரு இந்த மாநாட்டில் இல்லை என்று எனக்கு வருத்தம். இன்று மட்டும் காடுவெட்டி குரு இருந்திருந்தால் மற்றவர்கள் போல நானும் தம்பிகளோடு அமர்ந்து இருப்பேன். அவருடைய கனவு ஐயா காலத்தில் நாம் ஆள வேண்டும் என்பதுதான். திமுக பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக துரோகம் செய்கிறது.
1957-ல் திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதில் 14 தொகுதிகள் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள். 1962 ல் திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதில் 45 தொகுதிகள் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகள் 1967 இல் திமுக ஆட்சிக்கு வருகிறது.. அப்போது 138 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது அதில் 92 தொகுதிகள் வன்னியர் அதிகம் இருக்கும் தொகுதிகள். இப்படி திமுகவை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் அமர வைத்த சமூகமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. திமுகவில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம். 23 சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவிற்கு வன்னிய சமுதாயம் தான் கொடுத்துள்ளது..
ஆனால் இந்த சமுதாயத்திற்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை. இது வன்னியர் சமுதாயத்திற்கு அல்ல தமிழ்நாட்டுக்கே செய்யும் துரோகம்.. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து சமுதாயங்களையும் முன்னேற்ற தமிழக அரசு சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும். எம்பிசியில் வழங்கப்படும் 20 சதவீதத்தில் வன்னியர்கள் 12 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது.. ஆனால் அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளில் வன்னியர்களின் பங்கு மிக மிக சொற்பமாக உள்ளது.
உதாரணத்திற்கு காவல்துறையில் 109 உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர் உள்ளார். எம் பி சி உருவாக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிறது இதில் தகுதியானவர் ஒரே ஒருவர்தான் இருக்கிறாரா? என ஆவேசமாக கேள்வி. தமிழக அரசு சொல்வது போல 12 13% கிடைப்பது உண்மையானால் இந்நேரம் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் வந்திருக்க வேண்டும்.. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக வன்னியர் சமுதாயத்தில் இருந்து முதல் ஐஏஎஸ் அதிகாரி வந்துள்ளார்.
தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய வன்னியர் சமுதாயம் மிக மிக பின்தங்கிய சமுதாயமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் ஆனால் முதலமைச்சருக்கு இதைப் பற்றிய எந்த கவலையும் கிடையாது. வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல இதே போல ஒடுக்கப்பட்ட வெடிப்பு நிலையில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாய மக்களையும் முன்னேற்றத்திற்கு கொண்டுவர தமிழக அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்போம் என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் பாமக நிறுவனர் ராமதாஸ் இதற்காக 45 ஆண்டு காலமாக போராடி வருகிறார். இந்தியாவின் பல பிரதமர்களை நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். இந்த அறிவிப்பு மருத்துவர் ராமதாஸுக்கு கிடைத்த வெற்றி. தமிழக முதலமைச்சரே இன்னும் எவ்வளவு காலமாக எங்களை கெஞ்ச வைப்பீர்கள்..?
இத்தனை ஆண்டுகளாக நாம் மனு கொடுக்கும் சமுதாயமாக வாழ்ந்து வருகிறோம் இனி மனுவை பெரும் சமுதாயமாக வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இடம் மனமில்லை. பெரிய பெரிய நிறுவனங்களையோ ஏர்போட்டோ கட்டுவது வளர்ச்சி அல்ல சுற்றி இருக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் அதுதான் உண்மையான வளர்ச்சி. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்..
69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அதில் நாம் வெற்றி பெற டேட்டாவை கொடுக்க வேண்டும். அதற்கே சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அது அவர்களின் மிகப்பெரிய சாதனை. எந்தெந்த சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டை அதிகம் அனுபவிக்கின்றன இட ஒதுக்கீடு அதிகம் அனுபவிக்காத சமுதாயம் எது என்பதை கண்டறிய வேண்டும். தமிழகத்தில் 377 சமுதாயங்கள் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுகிறார்கள். இதில் எஸ்சி எஸ்டி மக்களுக்கு 19 விழுக்காடு.
இதில் கிட்டத்தட்ட 114 சமுதாயங்கள் பயன்பெறுகிறார்கள். எஸ்சி சமுதாயத்தில் மட்டும் உட்பிரிவாக 76 பிரிவுகள் உள்ளது. ஒரே சதவீதம் கொண்டுள்ள எஸ் டி யில் உட்பிரிவாக 34 பிரிவுகள் இருக்கிறார்கள். இவற்றில் எந்தெந்த சமுதாயம் இட ஒதுக்கீட்டை அதிகமாக அனுபவிக்கிறது எந்தெந்த பிரிவுக்கு இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு தான் சர்வே எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இன்னும் இட ஒதுக்கீட்டை அதிகம் அனுபவிக்காத பிரிவினரை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கொடுத்து முன்னேற்ற வேண்டும்.
எம்பிசியில் 115 சமுதாயங்கள் உள்ளது. அதில் 114 சமுதாயங்களின் சதவீதம் வெறும் 6.8சதவீதம். வன்னியர் சமுதாயம் மட்டும் 14.2 சதவீதம் உள்ளது. இவர்களில் யார் அதிகம் இட ஒதுக்கீட்டை எடுத்து செல்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள் அவர்கள் பின்னால் செல்லாதீர்கள் உங்கள் அண்ணன் என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு நல்ல படிப்பையும் வேலைவாய்ப்பையும் நான் வாங்கித் தருகிறேன். நாம் ஆள வேண்டும் நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது.. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம் இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம்.. வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள். இந்த மண்ணை பாதுகாக்க நம் பாட்டன் பூட்டன் பாதுகாத்து இந்த மண்ணை காத்து வைத்தான்.. இந்த மண்ணின் பூர்வ குடி மக்கள் நாம்.." என்றார்.












Click it and Unblock the Notifications