தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்.. தேர்தல் நெருக்கத்தில் எடப்பாடிக்கு ஷாக்!
சென்னை: வேலூர் மாவட்ட அதிமுகவில் முக்கியப் புள்ளியாக கருதப்படும் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் எல்.கே.எம்.பி. வாசு, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தவெகவில் இணைந்துள்ளது அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சென்னையில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, முறைப்படி த.வெ.க-வில் இணைத்துக் கொண்டுள்ளார் எல்.கே.எம்.பி. வாசு. பொங்கலுக்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த பலர் தவெகவுக்கு வர இருப்பதாக செங்கோட்டையன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் எல்.கே.எம்.பி. வாசு. அதிமுகவில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். 1991-ல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், பின்னர் 1996-ல் வேலூர் நகரசபை அதிமுக குழு தலைவராகச் செயல்பட்டார்.
கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அதிமுகவில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் செல்வாக்குடன் செயல்பட்டார். மேலும், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். அதன்பிறகு, 2017 வாக்கில் அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், எல்.கே.எம்.பி.வாசு சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். அப்போது எல்.கே.எம்.பி.வாசு, விஜய்க்கு எம்.ஜி.ஆர். குறித்த புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கி உள்ளார். இந்த இணைப்பு நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சரும், தவெக உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் மற்றும் தவெக வேலூர் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர், காட்பாடி, ராணிப்பேட்டை, கேவி குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அப்போதைய வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த நிர்வாகி த.வெ.க-வில் இணைந்திருப்பது, வேலூர் மாவட்டத்தில் தவெகவுக்கு கூடுதல் பலம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ச்சியாக தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் த.வெ.க தலைவர் விஜய் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புக் கழகத்தில் இருந்தவருமான ஜே.சி.டி. பிரபாகர், விஜய் முன்னிலையில் அண்மையில் தவெகவில் இணைந்தார். பொங்கலுக்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த பலர் தவெகவுக்கு வர இருப்பதாக செங்கோட்டையன் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications