கனமழை எச்சரிக்கை, வடியாத மழை நீர்! இன்று 7 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
சென்னை: தீவிரமான மழை பாதிப்பு காரணமாக சென்னை, நீலகி ரி உள்பட ஏழு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13-11-2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த 7 ம் தேதி பெய்த பேய் மழை மற்றும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி பெய்த விடாத மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.
7ம் தேதி தொங்கிய மழை,. 8ம் தேதி ஓரளவு குறைவாக இருந்தது. 9ம் தேதியும் குறைவாக இருந்தது. வெள்ளம் வடிந்து சென்னை மீண்டு வந்து கொண்டிருந்த சூழலில்வ 10ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை சென்னையின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது.

மாநகராட்சி ஊழியர்கள்
சென்னையின் புறநகர்ப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாக தொடங்கி உள்ளன. வெள்ளம் வடியாமல் இன்றும் பல பகுதிகள் தண்ணீர் தத்தளிக்கின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள 909 ஏரிகளில் 404 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டிஉள்ளன. ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அம்மா உணவகம்
வெள்ளம் வடியாததன் காரணமாக தீபாவளிக்கு பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடியே கிடக்கின்றன. பணிக்குச் செல்ல முடியாமல் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்க, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் , வேளச்சேரி, தாம்பரம், திநகர் உள்ளிட்ட பகுதிகளும், சுரங்கபாதைகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (13-11-2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் , இன்று (13ந்தேதி) பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (13ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று (13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்திலும், நீலகிரி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இதனிடையே புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதால் மீண்டும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதுமேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும். இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications