சம்பளம் பத்தாயிரங்களில்.. 8 வருடம், 372% சொத்து சேர்த்த சென்னை ராஜலட்சுமி! இது வெல்கம் காலனி ரகசியம்
சென்னை: சென்னையில் ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒட்டுமொத்த காவல்துறையையும் அலற விட்டுள்ளார்.. சம்பளம் என்னவோ இவருக்கு தகுதிக்கேற்றபடி கிடைத்து வருகிறது.. ஆனால், வருமானத்திற்கு அதிகமாக 5.42 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துவிட்டாராம் இந்த பெண் இன்ஸ்பெக்டர்.. இது எப்படி சாத்தியம்? என்றுதான் காக்கி சட்டைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.. யாரிந்த பெண்?
சென்னையில் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி.. திருமங்கலம் பகுதியில் உள்ள வெல்கம் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சென்னை பெண் இன்ஸ்பெக்டர்
இவர் கடந்த 1999ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது போலீஸ் வேலையை தொடங்கினார். அதன் பிறகு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் செல்வாக்கு மிக்க பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் அதிகாரத்தில் இருந்த காலத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக பெரும் அளவில் பணம் சம்பாதித்ததாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்திற்கு வரிசையாக புகார்கள் சென்றவண்ணம் இருந்தன..
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் தங்களது ரகசிய விசாரணையை தொடங்கினர். அப்போது கிடைத்த முதற்கட்ட ஆதாரங்களின்படி, கடந்த பிப்ரவரி 13ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
சொத்து மதிப்பு உயர்வு
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், பல முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் மேற்கொண்ட தீவிர ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில், ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எகிறி விட்டதாம்..
அதாவது 2017ம் ஆண்டு தொடக்கத்தில் வெறும் 3.64 லட்ச ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2025ம் ஆண்டிற்குள் பல கோடிகளை தொட்டுள்ளது.
கணக்கிடப்பட்ட வருமானத்தை விட 5.42 கோடி ரூபாய் அளவுக்கு அவர் கூடுதலாகச் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது அவரது சாதாரண வருமானத்தை விட 372 சதவீதம் அதிகமாகும்.
வெல்கம் காலனி ரகசியம்
பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவர் இந்த சட்டவிரோத பணத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பணப் பரிமாற்றம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து ராஜலட்சுமியிடம் நேரில் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை மாநகரக் காவல் துறை உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம்முடைய காவல்துறையில் எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.. அப்படியான பணியை செய்ய வேண்டிய காவல் துறையிலேயே, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள இந்தச் சம்பவம், தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!












Click it and Unblock the Notifications