கோகுல்ராஜ் கொலை- சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி- யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் அப்பீல் மனு டிஸ்மிஸ்!
சென்னை: சேலம் ஓமலூர் பொறியியல் கல்லூரி தலித் மாணவர் கோகுல்ராஜ் ஜாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாகும் வரையிலான ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. மேலும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய யுவராஜ் உள்ளிட்டோருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2015-ம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கி எடுத்தது ஓமலூர் கோகுல்ராஜ் ஜாதி ஆணவப்படுகொலை. நாமக்கல்லை சேர்ந்த வேறு ஜாதி மாணவி சுவாதியை கோகுல்ராஜ் காதலித்துள்ளார். இப்படியான காதலர்களை அடக்குவதையே வாடிக்கையாக வைத்திருந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூம் அவரது அடிப்பொடிகளும் கோகுல்ராஜ் விவகாரத்தில் தலையிட்டனர். கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டிருந்தார்.

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே அதிரச் செய்த இந்த ஜாதி ஆணவப்படுகொலை வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ், அமுதரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் 2 பேர் மரணம் அடைந்தனர். எஞ்சிய 15 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்ட இவ்வழக்கு முதலில் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் கடந்த ஆண்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக யுவராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வாசித்தனர்.
இருநீதிபதிகளும் தங்களது தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த ஒரு பிழையும் இல்லை. இவ்வழக்கில் 10 பேரின் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்படுகிறது. யுவராஜ் மட்டும் எவ்வித காரணங்களுக்காகவும் சிறையிலிருந்து வெளிவராத வகையில், சாகும் வரையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். பிரபு, கிரிதர் ஆகிய இருவர் மீதான ஆயுள் தண்டனையை மட்டும் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். தங்களது தண்டனைக்கு எதிராக 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என அதிரடியாக தீர்ப்பளித்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் 5 பேர் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜ் தாயார் சித்ரா தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.












Click it and Unblock the Notifications