ராமேஸ்வரம் கடலுக்குள் அள்ள அள்ள தங்கம்.. ஆச்சரியத்தில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்.. மொத்தம் 12 கிலோ
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: நாயகன் படத்தில் கடத்தல் பொருட்களை உப்பு மூட்டையில் கட்டி கடலில் வீசுவார் கமல் ஹாசன். அதே போல கேஜிஎப் 2. இந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் தான் சேர்த்துவைத்த தங்கக் கட்டிகளை நடுக்கடலுக்கு கொண்டு சென்று ஹீரோ கடலுக்குள் குதிப்பார். இப்படி சினிமா பாணியிலான காட்சிகள் நிஜமாகவே நேற்று நடந்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு சவரன் தங்கம் 50ஆயிரம் ரூபாயை தொடப்போகிறது. தங்கத்தின் விலை உயர்வால் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. விமானம் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் அதிகரித்து வருகிறது. கடல் மூலமும் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை வழியாக தங்கம் கடத்திவரப்படுவதாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடற்படையினருடன் இணைந்து தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கப்பல்கள் மூலம் தமிழகக் கடலோர எல்லை, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நாட்டுப்படகு வந்தது. ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் அந்த நாட்டுப்படகை விரட்டிச் சென்றிருக்கின்றனர்.
இந்திய கடற்படையினர் விரட்டி வருவதை தெரிந்துகொண்டு, நாட்டுப்படகிலிருந்து மிகப்பெரிய மூட்டை ஒன்றை அதில் இருந்தவர்கள் கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றனர். அதையடுத்து, சுமார் மூன்று நாட்டிக்கல் மைல் தூரம் விரட்டிச் சென்று அந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்தப் படகிலிருந்தது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் என்று தெரிய வந்தது. மூன்று பேரை கரைக்குக் கொண்டு வந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை செய்ததில்,மீன்பிடிக்கும் வலையைத்தான் கடலில் வீசினோம் எனக் கூறியுள்ளனர். கடத்தி வந்த தங்கக் கட்டிகளை மூட்டையாக கட்டி கடலில் வீசியதாக சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதனை தேடும் பணியில் இறங்கினர். இதற்காக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் நேற்று அதிகாலை முதல் அந்த மூட்டையை அதிகாரிகள் தேடி வந்தனர். 24 மணி நேர தேடுதல் வேட்டையில் எதுவுமே சிக்கவில்லை.
எங்களை அழைத்துச்சென்றால் மூட்டை வீசிய இடத்தை காட்டுவதாக கைது செய்யப்பட்ட நாகூர் மீரான் அதிகாரிகளிடம் கூறவே அவரை அழைத்துச்சென்று தங்கம் வீசப்பட்ட இடத்தை தேடி வந்தனர். மண்டபம் அருகே இன்று பிற்பகலில் 12 கிலோ மதிப்புள்ள தங்கக் கட்டிகள் ஆழ்கடலில் சிக்கியது. அதன் மதிப்பு 7.50 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு ஏதேனும் கடலுக்குள் வீசியிருக்கிறார்களா என்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications