நீலகிரியில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை.. குன்னூரில் கடும் வெள்ளம்.. நிலச்சரிவால் மலை ரயில் ரத்து
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் குன்னூரில் கனமழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வந்நது. திங்கட்கிழமை மாலை அவலாஞ்சி மற்றும் மசினகுடி பகுதிகளில் கனமழை பெய்தது. மசினகுடியில் பெய்த மழை காரணமாக முதுமலை வெளிமண்டல பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆனைக்கட்டி கிராமத்தில் உள்ள ஆனைக்கல் மாரியம்மன் கோயில் கார்த்திகை பூஜைக்காக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்றனர். திங்கட்கிழமை மாலையில் பூஜை முடிந்து கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கனமழை காரணமாக கெதஹல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதை அறியாமல் ஜக்கலோரையை சேர்ந்த விமலா, சரோஜா , வாசுகி , சுசிலா ஆகியோர் ஐனீஸ் பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து ஊட்டி மற்றும் கூடலூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் சென்று ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை ஊழியர்கள் மற்றும் கிராம மக்களும் உதவி செய்தனர். நள்ளிரவு 12 ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று காலை தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சரோஜா, விமலா, வாசுகி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
சுசிலாவை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியனாதும், ஒரு பெண் மாயமானதும் ஜக்கலோரை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 4 லட்சம் நிவாரணம்: சம்பவம் நடந்த பகுதிக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நேற்று விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலை போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அம்பிகாபுரம், டி.டி.கே. சாலை, இந்திரா நகர், வண்டிசோலை, உள்ளிட்ட இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மரங்களை அகற்றி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications