தொடர் கனமழை.. சென்னை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அட்வைஸ்!
சென்னை: சென்னையில் இன்று மதியம் முதல் திடீரென வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம், என பல்வேறு நகர்ப்புற பகுதியிலும், புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.
இதனால் சென்னையின் பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

திடீர் கனமழை
வெள்ளநீர் தேங்கியதால் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மழை பாதிப்பு தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வெளியே செல்ல வேண்டாம்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ''சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம். மழை ஓய்ந்த பிறகு தேங்கிய மழைநீர் அகற்றப்படும்' என்று அவர் கூறியுள்ளார். கனமழை காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்
கிண்டி, வடபழனி, எழும்பூர், ஆயிரம் விளக்குமயிலாப்பூர் ஆர்கே சாலை ராயப்பேட்டை என பல இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாநகர பேருந்து ஊர்ந்தபடியே சென்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியவில்லை., சில இடங்களில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நகராமல் அப்படியே அணிவகுத்து நிற்கின்றன.

கைகொடுத்த மெட்ரோ ரயில்கள்
சென்னை மழை, வெள்ள காலங்களில் மெட்ரோ ரயில்கள் எப்போதும் மக்களுக்கு கைகொடுத்து வருகின்றன. பல இடங்களில் மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. சென்னையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications