தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை - வானிலை அறிவிப்பால் தவிக்கும் விவசாயிகள்
குமரிக்கடல் பகுதியின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறுவடை நேரத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 11 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் 10 செமீ, கடலூர் பரங்கிப்பேட்டை AWS , அண்ணாமலை நகர் 8 செமீ, மயிலாடுதுறை கொள்ளிடம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
காட்டுமன்னார்கோயில்,நீடாமங்கலம், சீர்காழி, மணல்மேடு, திருப்பூண்டி, திருக்குவளை தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. சேத்தியாத்தோபு, காரைக்கால், நன்னிலம், லால்பேட்டையில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. பாண்டவையார்,திருவாரூர், கொடவாசல், அய்யம்பேட்டை, மஞ்சளாறு பகுதிகளில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இன்றைய தினம் மழை பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடகடலோர மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

எங்கெங்கு மழை
நாளைய தினம் தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், நீலகிரி, கோவை திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென் மாவட்டங்களில் மழை
நாளை மறுநாள், 14ஆம் தேதி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 15,16ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications