கரூரில் நெரிசலின்போது ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் தவெக மா.செ வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமீன்!
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலின்போது ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கடந்த 9 ஆம் தேதி தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் வந்தார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தனது உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நேரடியாக வருகை தந்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கரூரில் விஜய் பிரச்சார பரப்புரை நடைபெற்ற நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வேகமாக இயக்கப்பட்டதாக தவெக நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக சேலம் மாவட்ட செயலாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தவெக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications