’பராசக்தி’ யால் கிடைத்த தேர்தல் வெற்றி.. அனல் பறந்த கருணாநிதியின் அரசியல் வசனங்கள்..
சென்னை: 'பகுத்தறிவு' இயக்கத் திரைப்படங்களில் மிக முக்கியமானது 'பராசக்தி' தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வலையை உண்டாக்கிய படம். சென்சார் ஆகி படம் திரைக்கு வந்த பிறகும், வலதுசாரிகள் சிலர் 'மீண்டும் படத்தைத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்' எனச் சர்ச்சையைக் கிளப்பினர்.
அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அலை அலையாக ரசிகர்கள் திரையரங்கில் வந்து குவிந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அதுவரை திரைப்படம் என்றால் அதில் 30 பாட்டுக்கள் இருக்கும். நினைத்த நேரம் எல்லாம் கதாநாயகன் சாஸ்திரிய சங்கீதத்தில் பாடிக் கொண்டே இருப்பார். அறிவார்ந்த விசயம் இருக்கவே இருக்காது. சதா காலமும் கடவுளை வழிபடுவதும் அவருக்காகச் சேவகம் செய்வதும்தான் வாழ்க்கை என்ற அளவில் புராண நெடி அடிக்கும்.
அதைத்தான் இந்தப் 'பகுத்தறிவு வாத அலை' திரைப்படங்கள் புரட்டிப் போட்டன. கடவுளை எதிர்த்து கேள்வி எழுப்பியது 'பராசக்தி'.

"பூசாரியைத் தாக்கினேன், இப்படியெல்லாம் குற்றம் சாற்றப்பட்டிருக்கிறேன் நான். நீங்கள் எதிர்பார்த்து இருப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப் போகிறேன் என்று, இல்லை நிச்சயமாக இல்லை.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்... கோவில் கூடாது என்பதற்காக அல்ல... கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன்... அவன் பக்தன் என்பதற்காக அல்ல... பக்தி பகல் வேசம் ஆகிவிட்டதே என்பதைக் கண்டிப்பதற்காக." என்று வசனங்கள் திரையில் ஒலித்த போது உற்சாகத்தில் மிதந்தனர் ரசிகர்கள்.
அங்கு அந்த வசனத்தை நடிகர் சிவாஜி கணேசன் பேசவில்லை. அதை அப்படியே உள்வாங்கி ரசிகர்கள் பேசினர்.
'பராசக்தி' நீதிமன்ற காட்சியில், "கேளுங்கள் என் கதையை, தீர்ப்பு எழுதுவதற்கு முன் கேளுங்கள் என் கதையை, தமிழ் நாட்டிலே... இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு... பிழைக்க ஒரு நாடு. தமிழ் நாட்டின் தலை எழுத்திற்கு நான் விதிவிலக்கா? இரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது.

திருமணக் கோலத்தில் இருக்கும் என் தங்கையைக் காணவந்தேன், மோசடி வழக்கில் ஈடுபட்டு குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறாளே இதோ இந்த ஜாலக்காரி ஜாலி, இவள் வலையிலே விழுந்த ஆடவர்களில் நானும் ஒருவன்.
பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன்... பட்டினியில் திரிந்தேன்... பசியால் மெலிந்தேன்... கடைசியில் பைத்தியமாக மாறினேன்" என்று 'குணசேகரன்' கதாபாத்திரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் திரையில் பேசப் பேச விசில் பறந்தது. சத்தம் விண்ணைக் கிழித்தது.
மேலும், "கல்யாணியைக் கஞ்சிக்கு வழியில்லாதவளாக அலைய விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவைத்த வஞ்சகர்களின் குற்றமா?

கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரைச் சொல்லி காலேட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?" என அடுக்கு மொழியில் வசனங்களை தன் எழுத்து நடையால் அள்ளித்தெளித்தார் கருணாநிதி.
அதுவரை அப்படியான வசனத்தைக் கேட்டதே இல்லை என்று பத்திரிகைகள் பாராட்டினர். பக்கம் பக்கமாக எழுதின.
தனக்கு 'பராசக்தி' பட வாய்ப்பு எப்படி வந்தது என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியே ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.
"பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட 'நேஷனல் பிக்சர்ஸ்' பெருமாள் 'பராசக்தி'க்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை நான் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இயக்குநர்கள் கிருஷ்ணன், பஞ்சு இருவரும் ஒருவராக இருந்து என்னிடம் அன்பு காட்டியவர்கள். அவர்களும் என்னை வலியுறுத்தினார்கள்.

அப்படத்தில் முதலில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிதான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறு படங்கள் இருந்த காரணத்தால், 'பராசக்தி'யில் குணசேகரன் வேடத்தில் நடிக்கச் சிவாஜியை ஒப்பந்தம் செய்தார்கள்.
அந்தப் படம் ஏவி.எம்.- நேஷனல் பிக்சர்ஸின் கூட்டுத் தயாரிப்பு. சிவாஜி இரண்டொரு காட்சிகளில் நடித்ததைப் போட்டுப் பார்த்துவிட்டு, ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அதிருப்தி தெரிவித்து நடிகரை மாற்ற வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
நானும், பெருமாளும் இயக்குநர்களும் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் கருத்தை ஏற்கவில்லை. ஒரு அற்புதமான நடிகரை அவசரப்பட்டு இழந்துவிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினோம்.

அதன்பின்னர் 'பராசக்தி'யில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தார். 'பராசக்தி' மக்களைப் பெரிதும் ஈர்த்து எழுச்சி ஊட்டிய படமாகத் தமிழகமெங்கும் வெற்றிநடை போட்டது" என்கிறார்.
மு.கருணாநிதி சொல்வதைப் போல் இந்தப் படம் சிவாஜி கணேசனின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் உதவவில்லை. திராவிட இயக்க பிரச்சாரத்திற்கும் சேர்ந்து உரம் போட்டது என்பதே உண்மை.
"கருணாநிதி என்ற வசனகர்த்தாவை ஒரு கருத்தியல்வாதியாக முழுமையாகக் கட்டமைத்த திரைப்படம் 'பராசக்தி'தான்.

பாவலர் பால சுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், திராவிடர் கழகத்திலிருந்து திமுகவை மிகத் தெளிவாகப் பிரித்துக் காட்டியது" என்கிறார் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.
'பராசக்தி'யின் அலையைச் சரியாகக் கணிக்கவில்லை காங்கிரஸ் கட்சி. அடுத்து வரப் போகும் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தப் போகிறது என்பதும் அவர்கள் உணராத ஒன்றாகவே இருந்தது.
சரியாகப் படம் வெளியான 1952 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தது. 'தினமணி'யின் முதலாளி ராம்நாத் கோயங்கா, திண்டிவனம் தொகுதியில் காங். வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து நின்ற திருக்குறள் முனுசாமியை திமுக ஆதரித்தது. இறுதியில் கோயங்கா படுதோல்வியைச் சந்தித்தார். இதனால் நேரடியாக கோயங்காவின் பகையைச் சம்பாதித்தார் கருணாநிதி. அவரை எதிர்த்து தனது பத்திரிகையில் 'பரப்பிரம்மம்' என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வெளியிட்டார். இவரை எதிர்த்து 'பரப்பிரம்மம்' என்ற நாடகத்தை எழுதினார் கருணாநிதி.
அந்த நாடகம் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் அரங்கேற்றப்பட்டது. அது காங்கிரஸ் அரசியலை மிகக் கடுமையாக நையாண்டி செய்தது.
'பராசக்தி' படத்தில் தனது அறிமுக காட்சியில் சிவாஜி கணேசன் 'சக்சஸ்! சக்சஸ்..' என்று வசனம் பேசினார். அந்த சக்சஸ் வசனகர்த்தா மு.கருணாநிதி அரசியல் வாழ்க்கையிலும் நிஜமாக நடந்தது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications