"தமிழ்நாடு ஜெயிச்சதுக்கு காரணமே படிப்பு தான்".. நீயா நானாவில் கோபிநாத்தை நெகிழ வைத்த பெண்!
தமிழ்நாடு ஜெயிச்சதுக்கு காரணமே படிப்பு தான் என்று நேற்றைய நீயா நானா விவாத நிகழ்ச்சியில் கோபிநாத் பேசினார்.
சென்னை: தமிழ்நாடு ஜெயிச்சதுக்கு காரணமே படிப்பு தான் என்று நேற்றைய நீயா நானா விவாத நிகழ்ச்சியில் கூறப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. தமிழ்நாடு படிப்பால் எப்படி ஜெயிச்சது என்பதை அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசியதை வைத்து கோபிநாத் விளக்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் படிப்பில் தான் ஆர்வம் காட்டுவார்கள். அசுரன் படத்தில் ஒரு வசனத்தை தனுஷ் பேசுவார், உன் கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க.. ரூபாய் இருந்த புடிங்கிக்குவானுங்க.. ஆனால் படிப்ப மட்டும் நம்ம கிட்ட எடுத்துக்கவே முடியாது" என்று கூறுவார். இதை என்றோஉணர்ந்த மக்கள், படிப்பில் அதீத ஆர்வம் காட்டினார்கள்.
அதனால் கடந்த 20 வருடங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் படித்து முன்னேறி விட்டார்கள். கடந்த இரண்டு தலைமுறைகளில் பலர் படித்து மேலேவந்துவிட்டனர்- நான் என்ன கஷ்டப்பட்டாலும் பிள்ளையை படிக்க வைக்கனும் என்று கூறி படிக்க வைத்த பெற்றோர் பலர் இருக்கிறார்கள்.

வறுமையில் கல்வி
பட்டினி கிடந்தாலும், உடுத்த உடை இல்லை என்றாலும், வேலைக்கு போக வாகனம் இல்லை என்றாலும், வறுமை கொடூரமாக வாட்டினாலும், படிப்பை தமிழ்நாட்டு மக்கள் பலர் கைவிடவில்லை. அதன் விளைவாக நவீன தொழில்நுட்பத்தை ஆளும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள். வறுமையில் கஷ்டப்பட்டு படித்த பலர் தமிழ்நாட்டில் இன்றைக்கு நல்ல வேலையில் இருக்கிறார்கள். முன்னேறிய மாநிலமாக மாறியதற்கு கல்வி மிக முக்கிய காரணமாக இருந்தது.

கருணாநிதி
காமராஜர் தொடங்கிய கல்வி புரட்சி, அதன்பிறகு வந்த அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அடுத்து வந்த அத்தனை பேரும் போட்டி போட்டு கல்விக்கான சலுகைகளை அறிவித்தார். இலவச கல்வி, மதிய உணவு, மதிய உணவில் முட்டை, சத்துணவு, இலவச பஸ் பாஸ், விலையில்லா சீருடை, விலையில்லா சைக்கிள், விலையில்லா லேப்டாப் என போட்டி போட்டு திட்டங்களை செயல்படுத்தியால் தமிழ்நாட்டில் பலரும் உயர்கல்வி பயின்றார்கள். நாட்டிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு தான். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது.

பெண் பேச்சு
இந்நிலையில் கிராமத்து சிங்கிள் மதர் மற்றும் நகரத்து சிங்கிள் மதர் என்ற கான்செப்ட் விஜய்டிவி நீயா நானா நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதில் தமிழ்நாடு ஜெயிச்சதுக்கு காரணமே படிப்பு தான் என்பதே பெரிதாக பேசப்பட்டது. ஒரு பெண் நிகழ்ச்சியில் பேசும் போது, "இரண்டு பையன் , 10வது வரைக்கும் படிக்க வச்சா போதும், நீ ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே, எதுக்கு பிள்ளைகளை படிக்க வைக்கிறாய், நீ வீட்டில் இருக்க வேண்டியது தானே என்று என்னை கேட்டார்கள்" என்றார். அப்போது குறுக்கிட்ட கோபிநாத், "உங்கள் பிள்ளைகள் இப்போது என்ன படிக்கிறார்கள்" என்று கேட்டார். அப்போது அந்த பெண், "ஒரு பையன் டிப்ளமோ முடிச்சுட்டு வேலை பார்க்குறான் சார், இன்னொரு பையன் பிபிஏ முடிச்சிருக்கான், வெளிநாடு போய்ட்டான் சார். நீ சிங்கிள் மதர் தானே, எதற்காக கஷ்டப்படுகிறாய் என்று கேட்டார்கள்" என்றார்.

கண்ணீர் மல்க பேச்சு
அப்போது குறுக்கிட்ட கோபிநாத், "அதை மீறி நீங்கள் ஏன் படிக்க வைத்தீங்க" என்று கேட்டார். அப்போது பேசிய அந்த கிராமத்து பெண், "என் பையன் வீட்டில் வைத்து சாப்பாடு போகிறான். என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறான். உனக்கு என்ன வேண்டுமென்னாலும் வாங்கி கொள் என்றான். நான் 300 ரூபாய் சம்பளத்திற்கு 13 வருசம், நைட்டு 10 மணி வரைக்கும் கார்மெண்ட்ஸ் இல் வேலை பார்த்திருக்கேன்.. 60 ரூபாய் சம்பளத்துல வேலைக்கு போனேன். எப்ப ஓட்டி (ஓவர் டைம்) தருவாங்கனு இருப்பேன். ஏன்னா 30 ரூபாய் கிடைக்கும் என்பதற்காக எதிர்பார்ப்பேன். இப்ப என் மகன் சொல்கிறான்.. 500 ரூபாய் என்றாலும் வேண்டாம்மா.. நான் ஒரு நாள் வேலை பார்த்தால் 2000 ரூபாய் சம்பளம்.. நீ வீட்டில இரு.. 3 நாள் வேலை பார்த்தால் 6000 சம்பளம். உன் மாச சம்பளம் அதுதான் நீ வீட்டில் இரும்மா அப்படின்னு என் பையன் சொல்றான் சார்" என கண்ணீர் மல்க பேசினார். அப்போது குறுக்கிட்ட கோபிநாத், "இப்ப நீங்க வீட்டில் தானே இருக்கீங்க" என்று கேட்டார். அதற்கு அந்த பெண் "ஆமாம் சார் வீட்டில் தான் இருக்கிறேன். ஒன்றரை வருசமாக வீட்டில் தான் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அரசு பள்ளிகள் காரணம்
அப்போது கோபிநாத், "இப்ப உங்களுக்கு 300 ரூபாய் என்பது என்ன" என்று கேள்வி கேட்டார். அதற்கு அந்த கிராமத்து பெண், என்னுடைய ஒரு நாள் செலவு சார் என்றார். அப்போது கோபிநாத், "இதுதான் கெத்து, படிப்பு என்ன பண்ணும் அப்படின்றதுக்கு ஆதாரம் இதுதான்.. நம்ம சமூகம் வளர்த்ததுக்கு,குறிப்பாக இங்க(தமிழ்நாடு) வளர்ந்ததுக்கு முக்கியமான காரணம். வறுமையில எதை கட்பண்ணணும் அப்படின்றது ஒரு கட்டத்துல நமக்கு தெரிஞ்சிருக்கு.. வறுமையில நம்ம செலவுகளை கட் பண்ணணும்.. வறுமையில நம்ம ஆடம்பரத்தை கட் பண்ணணும்.. நம்ம சாப்பாட்டை கூட கட் பண்ணுனோம்.. ஆனால் படிப்பை கட் பண்ணல.. தமிழ்நாடு ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம்னா, அந்த 300 சம்பளம் வாங்குன அம்மா..அவங்களோ கனவு தான்".. என்றார்.

கல்வி கனாவாகியிருக்கும்
மேலும் கோபிநாத் "நீங்க 300 ரூபாய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சீங்க.. எந்த உதவி உங்களோட பிள்ளைங்கள படிக்க வச்சதும்மா" என்று கோபிநாத் கேட்டார். அப்போது அந்த பெண், "நான் இரண்டு பிள்ளைகளையுமே அரசு பள்ளியில் தான் படிக்க வைத்தேன்.. ஒரு மகளிர் குழுவில் பணம் எடுப்பேன். கட்டுவேன்.. அப்படியே சென்றது" என்றார். அப்போது கோபிநாத் "ஒருவேளை அரசு பள்ளி இல்லாமல் இருந்தால் என்னாகியிருக்கும்" என்று கேட்டார், அதற்கு அந்த பெண், "அய்யோ ரெம்ப கஷ்டப்பட்டு போயிருப்போம்.. படிப்பே இல்லாமல் போயிருக்கும்" என்று கிராமத்து பெண் பேசினார். இந்த வார நீயா நானா விவாதம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications