Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியார் முதல்.. பழ.கருப்பையா வரை.. தவிர்க்க முடியாத வார்த்தையான 'கழகம்’ - ஏன்? எதற்கு? எப்படி?

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கட்சிகளின் பெயர்களில் ‘கழகம்’ என்ற வார்த்தை தவறாமல் இடம்பெறுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பட்டியலில் புதியதாக ஒரு கட்சியின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. பேச்சாளர் மற்றும் மூத்த அரசியல் தலைவர் பழ.கருப்பையா, 'தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்' என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் காங்கிரஸ் தொடங்கி, கடைசியாக மக்கள் நீதி மய்யம் வரை பல கட்சிகளுக்குச் சென்றவர்.

இறுதியாக பழ.கருப்பையா தனது கட்சி பெயரில் 'கழகம்' என்பதைக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.

இன்று செயல்பாட்டில் இருக்கும் தேர்தல் அரசியல் கட்சிகளில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, அமமுக என பெரும்பாலானவற்றில் கழகம் என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது.

திமுகவிற்கு அண்ணா வைத்த முதல் பெயர்

திமுகவிற்கு அண்ணா வைத்த முதல் பெயர்

தமிழ்நாட்டில் இந்தக் 'கழகம்' என்ற சொல் கடந்த 80 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத வகையில் இடம்பெற்று வருகிறது.

அண்ணாதுரை திமுகவை 1949இல் தொடங்கியபோது அவரது கட்சிக்கு ஆங்கிலத்தில், 'டிரவிடியன் புரொக்ரசிவ் ஃபெடரேஷன்' (Dravidian Progressive Federation) என்றே பெயர் வைத்தார். திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'நம்நாடு' நாளேட்டில் இந்தப் பெயரே குறிப்பிடப்பட்டது.

அண்ணாதுரை ஆங்கிலத்தில் எழுதும்போது 'டிபிஃஎப்' என்றே தன் பத்திரிகையில் அச்சிட்டார். ஆனால் 'தி இந்து' நாளிதழ் ஆங்கிலத்தில் எழுதும் போது 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்பதைச் சுருக்கி 'டி.எம்.கே' என்றே எழுதிவந்தது. இதன் பின்னால், அண்ணாதுரையும் டி.எம்.கே' என்பதையே எழுதத் தொடங்கினார்.

அண்ணாதுரை கட்சி தொடங்குவதற்கான அழுத்தம் தொண்டர்கள் மத்தியில் வலுத்தபோது அதற்கு அவர் உடன்பட்டார். என்ன பெயர் வைக்கலாம் என அரங்கண்ணல், வாணன், செழியன் உள்ளிட்ட தலைவர்கள் உட்கார்ந்து பேசிய போது முதலில் வாணன், 'தமிழ்நாடு சோஷியலிஸ்ட் கட்சி' என்று அண்ணாதுரைக்கு எடுத்துக் கொடுத்தார்.

ஆங்கிலத்தில் அண்ணா மாற்றிய மூன்று எழுத்துகள்

ஆங்கிலத்தில் அண்ணா மாற்றிய மூன்று எழுத்துகள்

ஆனால், அண்ணாதுரை 'திராவிடர்' மற்றும் 'கழகம்' என்ற சொற்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என விரும்பினார். அதையொட்டி, 'திராவிட சோஷலிஸ்ட் கழகம்', 'திராவிட சமதர்மக் கழகம்' எனத் தொடங்கி, 'திராவிடத் தீவிரவாதிகள் கழகம்' வரை பட்டியல் போடப்பட்டது.

தமிழ்ப் பெயர்களை அப்படியே ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தார்கள். இறுதியாக அண்ணாதுரை, 'Dravidian Progressive Federation' எப்படி இருக்கு? என்றார். அதைத் தமிழில் மாற்றிய போது, 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்பது வந்தது. ஒரே குரலில் அதற்கு ஆதரவு கிடைத்தது.

ஆக, அண்ணா தனது கட்சியில் 'கழகம்' என்பது இருக்க வேண்டும் என விரும்பியதற்கு மூலம் 'திராவிடர் கழகம்' தான். இந்தப் பெயரில் 1944 இல் தனது கட்சியைத் தொடங்கினார். திமுகவிற்கு முன்பாகவே 1946இல் 'தமிழரசுக் கழகம்' என்ற பெயரில் ம.பொ.சி தனது கட்சிக்குப் பெயரிட்டிருந்தார்.

இந்த அரசியல் இயக்கங்களுக்கு முன்னதாக 'கழகம்' என்ற சொல்லைப் பிரபலப்படுத்தியது 'சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்'தான். இந்தப் பதிப்பகம் 1920களிலேயே திருநெல்வேலியிலிருந்து செயல்படத் தொடங்கியது. இதன் பின்புலமாக மறைமலையடிகள் இருந்தார். இந்தப் பதிப்பகத்தின் வெளியீடுகளுக்கு 'கழக வெளியீடு' என்றே மக்கள் மத்தியில் அறியப்பட்டது.

சமஸ்கிருத வார்த்தைக்கு மாற்றாக ‘கழகம்’

சமஸ்கிருத வார்த்தைக்கு மாற்றாக ‘கழகம்’

கரு. ஆறுமுகத் தமிழன், "சங்கம் என்பது சமஸ்கிருதம் சார்பு என்பதால் அதற்கு இணையாக 'கழகம்' என்பதைப் பயன்படுத்தினார்கள். 'கழகம்' என்பது ஒன்றாகக் கூடியிருந்து காரியங்களைச் செய்யும் இடம் என்பதைக் குறிக்கும். இது ஒரு தூயத் தமிழ்ச் சொல். பின்னர்தான் 'கட்சி' என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அந்த அடிப்படையில்தான் 'பல்கலைக்கழகம்' என வைக்கிறார்கள்.

அந்தக் காலத்திலேயே தூய தமிழியக்கத்து ஆட்கள், 'சங்க இலக்கியங்களை 'கழக இலக்கியம்' என்றே குறிப்பிட்டு வந்தனர். தேவநேய பாவாணரும் 'கழக இலக்கியம்' என்றே கூறிவந்தார்.

தமிழறிஞர் மற்றும் ஆய்வாளர் பொ.வேல்சாமி, "முதன்முதலாக 'கலித்தொகை'யில்தான் 'கழகம்' என்ற சொல் இடம்பெறுகிறது. அதில் சூதாடும் இடத்தைத்தான் 'கழகம்' என்கிறது 'கலித்தொகை'. அதற்குப் பின்னால் கற்றவர்கள் கூடும் அவை என்ற பொருளில் 'கம்பராமாயணம்' நூலில் இடம்பெறுகிறது. ஏறக்குறைய 800 ஆண்டுகள் கழித்துத்தான் இந்தப் பொருள் மாறுகிறது.

கழகம் என்பதற்குப் பழைய அர்த்தம் என்ன?

கழகம் என்பதற்குப் பழைய அர்த்தம் என்ன?

திருக்குறள் கூட 'கழகம்' என்பதைச் சூதாடும் இடம் என்றே குறிப்பிடுகிறது. ' பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்; கழகத்துக் காலை புகின்' என்கிறது திருக்குறள். கம்பராமாயணத்தில், 'கந்தனை யனையவர் கலைதெரி கழகம்' என்று வருகிறது. கல்விபயிலும் இடம் என்று பொருள்.

'கழகம்' என்ற சொல்லை வைத்து அறிஞர் வையாபுரிப் பிள்ளை தனிக் கட்டுரையே எழுதி இருக்கிறார். திமுக 'கழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்திய பின்னால் அதற்கு ஒரு அறிவார்ந்த அர்த்தம் உருவானது. மேதாவிகளின் சபை என்ற பொருளில் அது அர்த்தம் உருவானது" என்கிறார்.

கவிஞரும் எழுத்தாளருமான மகுடேசுவரன் இது குறித்து என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். தமிழ்ச் சொற்கள் குறித்தும் தமிழ் இலக்கணங்கள் குறித்தும் அதிகம் எழுதி வருபவர்.

அவர், "இந்தக் கழகம் என்ற சொல் அதிகமாகப் பரவியதற்குத் திராவிடர் கழகம்தான் முக்கிய காரணம். இந்தச் சொல்லை காங்கிரஸ் என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காங்கிரஸ் என்பது கட்சி அல்ல; அதைத் தமிழில் எழுதும் போதுகூட பாரதி, 'மகாசபை' என்றே எழுதுகிறார். கற்றறிந்தோர் கூடும் சபை எனப் பொருள்பட இச்சொல்லை எடுத்து ஆளுகின்றார்கள்.

 பரஞ்சோதி முனிவர் பயன்படுத்திய கழகம்

பரஞ்சோதி முனிவர் பயன்படுத்திய கழகம்

முற்காலத்தில் தமிழ்ச் சங்கங்களுக்கு 'கழகம்' எனப் பெயர் இருந்தது. அதாவது 'முதற்கழகம்', 'இடைக்கழகம்', ' கடைக்கழகம் ' என அழைக்கப்பட்டது. இந்தக் கழகங்களுக்கு அறிவார்ந்த சபை என அர்த்தம். இங்கே அதிகமான விவாதங்கள் நடைபெறும். சுருக்கமாகச் சொன்னால், இதை சாக்ரடீஸ் உரையாடலுக்கு இணையானது எனலாம். பரஞ்சோதி முனிவர், 'கழகம்' என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார். மேலும் 'கழகம்' குறித்து தேவநேய பாவாணர் நிறைய எழுதி இருக்கிறார். திமுக வந்த பிறகு இச்சொல் தமிழ்நாட்டில் ஆகுபெயர் ஆகிவிட்டது" என்கிறார்.

மொழி குறித்தும் அரசியல் கோட்பாடு பற்றியும் எழுதிவரும் ஆழி செந்தில்நாதன் பேசும் போது, "இந்தச் சொல் எந்த அளவுக்குக் கவனம் பெற்றுள்ளது என்பதை விளக்குவதற்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா? மூத்த அரசியல்வாதி ராம்ஜத் மலானி சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கட்சியைத் தொடங்கினார். அதற்கு அவர், 'பவித்ர இந்துஸ்தான் கழகம்' என்று வைத்தார். தென்னிந்தியாவைக் குறிப்பதற்காகவே அவர், 'கழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ராம்ஜெத் மலானியை ஈர்த்த ‘கழகம்’

ராம்ஜெத் மலானியை ஈர்த்த ‘கழகம்’

இந்தக் 'கழகம்' என்ற சொல்லைப் பெரியார் வைப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரு சிறிய கட்சி, 'திராவிடர் கழகம்' என்ற பெயரில் இயங்கிவந்தது. அதைக் கொண்டே பின்னால் பெரியார் அதே பெயரில் தனது சீர்திருத்த அமைப்பைத் தொடங்கினார். கட்சி, இயக்கம் என்ற சொற்களைவிட 'கழகம்' என்பதற்கு வேறு பொருள் இருந்தது. ஆகவேதான் இந்தக் கழகம் என்பதை அண்ணாவும் தனது கட்சியின் பெயராக சேர்த்துக் கொண்டார்" என்கிறார்.

இன்னொரு சுவாரசியம் சொல்ல வேண்டும் என்றால், 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற ஒரு பாடல்கூட சிவாஜியின் 'தங்கப்பதக்கம்' படத்தில்கூட இடம்பெற்றுள்ளது. அவர் காங்கிரஸ்காரர். அவரது படத்தில் கூட, 'கழகம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+