நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பெற்றது எப்படி? பின்னணியில் "ஒரு சக்தி!" பிரபஞ்சன் சொன்ன ரகசியம்
சென்னை: நீட் தேர்வு எழுதும் முன்பாக தொடர்ந்து மெடிடேஷன் செய்தேன் என்று கூறியுள்ளார் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சன். தொடர் பிரார்த்தனையும் விடா முயற்சியுமே எனது வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ள பிரபஞ்சன் புரிந்து படித்தாலே நீட் தேர்வில் சாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி, மணிப்பூரைத் தவிர்த்து நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பலர் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். ஏழை மாணவர்களும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களும் பல லட்சம் செலவு செய்து நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்க முடியாது என்பது நிதர்சனமாக உண்மை. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன், நீட் தேர்வு எழுதி தன் முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
விடா முயற்சியாலும் தொடர் பயிற்சியாலும் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றதாக கூறியுள்ளார் பிரபஞ்சன், படிப்பைப் போலவே பொழுதுபோக்கிற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்தாக அதில் கூறியிருக்கிறார். டாக்டராக வேண்டும் என்ற கனவு ஒருபுறம் இருந்தாலும், பொழுதுபோக்கிற்கும் குறை வைக்கவில்லை பிரபஞ்சன். ஓய்வு நேரங்களில் தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பது, செல்போனில் விளையாடுவது என தன் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் விசயங்களைச் செய்துள்ளார். "படிப்பும், பொழுதுபோக்கும் சம அளவிலேயே இருந்தது. பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துள்ளேன். கல்கியின் வருணனை எனக்கு மிகவும் பிடிக்கும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற புத்தகங்களையும் படித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரபஞ்சன்.
All India NEET Rank 1 Holder
— Sevak Sathya (@Sevakofmata) June 20, 2023
The power prayers pic.twitter.com/pQVOcSjm9w
அரசு பள்ளி ஆசிரியர்கள்: பிரபஞ்சனின் பெற்றோர்களான ஜெகதீஷ் மற்றும் மாலா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் ஜெகதீஷ். இதேபோல், செஞ்சி வட்டம் நெகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார் பிரபஞ்சனின் அம்மா மாலா. பத்தாம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிக் பள்ளியில் படித்த பிரபஞ்சன், 12ம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா CBSE பள்ளியில் முடித்துள்ளார்.
"சிறுவயது முதலே எல்லாம் எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருக்கவில்லை. எனக்கு பயாலஜியை படிக்க மிகவும் பிடிக்கும். 8ம் வகுப்பு படிக்கும் போதுதான், மருத்துவராக வேண்டும் என்ற ஆசை வந்தது." 10 ஆம் வகுப்பு வரை நான் மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். ஆனால், நீட் எனக்கு கடினமாக இருக்கவில்லை. நான் 11ம் வகுப்பு முழுவதும் விடுதியில் தங்கி இருந்தேன். அங்கு இருக்கும்போது நான் செல்போன் பயன்படுத்தவில்லை. 12ம் வகுப்பு என் உறவினர் வீட்டில் தங்கிப் படித்தேன். இங்கு வந்த பிறகும் நன்றாகப் படித்தேன். தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 அல்லது 12 மணி வரை நான் படிப்பேன்.
கடும் உழைப்பால் நீட் தேர்வில் முழு மதிப்பெண் சாத்தியமாயிற்று. திட்டமிட்டு படித்ததால் 100% மதிப்பெண் கிடைத்தது. தொடர் பயிற்சியும் வெற்றியை சாத்தியமாக்கியது. யாராலும் முடியாது என்பது கிடையாது," என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் பிரபஞ்சன். எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் சிறப்பானவர்கள். உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்தான். இரவு நேரத்தில் நான் படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே போனை எடுப்பார்கள். ஏன் இத்தனை மணிக்கு போன் செய்கிறாய் என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். உடனே என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பார்கள் என்றும் பிரபஞ்சன் கூறயுள்ளார்.
நான் அடிக்கடி தியானம் செய்வேன். பெரியப்பாவின் வீட்டிற்கு வரும் போதெல்லாம் தியானம் செய்வேன். பெரியப்பாவின் அலுவலகத்திலும் தியான வகுப்புகளும் பிரார்த்தனை வகுப்புகளுக்கும் செல்வேன் என்று கூறிய பிரபஞ்சன், கடவுளின் கருணை இல்லாமல் இந்த வெற்றி எனக்கு சாத்தியமாகியிருக்காது.
பிரபஞ்சனின் வெற்றி குறித்து பேசிய அவரது பெரியப்பா சேவக் சத்யா, மாணவர்கள் தேர்வு எழுதும் போது கூட இருப்பவர்களும் தியானம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உறவினர்கள் தியானம் செய்து அந்த சக்தியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். வீட்டில் இருந்து தியானம் செய்வதன் மூலம் தொலை தூரத்திற்கு கொடுக்கும் சக்தியானது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். நிறைய பெற்றோர்கள் அப்படி தியானம் செய்வதில்லை. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மெடிடேசன் செய்து சக்தி கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. உதாரணத்திற்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி நாளில் நடைபெறும் போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிக்காக கேப்டன் தோனி உட்பட பலரும் கண்களை மூடி தியானம் செய்தனர். அதுபோல மாணவர்கள் தேர்வு எழுதும் போது தியானம் செய்ய வேண்டும். அதுதான் உங்களுடைய பொறுப்பு என்றும் சேவக் சத்யா கூறினார்.
நீட் தேர்வு மிகவும் கடினமானது என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் முதலில் வெளிவர வேண்டும். அந்த மனநிலை வந்தால்தான் படிக்க முடியும். நீட் தேர்வு அந்த அளவுக்கு கடினமானது எல்லாம் இல்லை. புரிந்து படித்தாலே போதும் என்று தனது சக்சஸ் ஃபார்முலா பற்றி கூறியுள்ளார் பிரபஞ்சன்.












Click it and Unblock the Notifications