சவுத்துக்கு போட்ட ஸ்கெட்ச் ‘மிஸ்’.. வடக்கே வேட்டையில் சிக்கிய தலைகள்! கோட்டை விட்ட டிடிவி.. போச்சே!
சென்னை : அமமுக நிர்வாகிகளை தம் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி போட்ட பிளான் தென் மாவட்டங்களில் 'ஃபெயிலியர்' ஆன நிலையில், வடக்கில் சி.வி.சண்முகம் மூலம் ஈபிஎஸ்ஸின் திட்டம் வாகை சூடியுள்ளது. டிடிவி தினகரனிடமிருந்து இரண்டு மாவட்ட செயலாளர்களை தூக்கியிருக்கிறார் சி.வி.சண்முகம். தெற்கில் எடப்பாடி அணியினருக்கு தண்ணி காட்டிய டிடிவி தினகரன், வடக்கில் கோட்டை விட்டிருக்கிறார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுகவை பலப்படுத்த, அமமுக நிர்வாகிகளை தாய்க் கழகத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். குறிப்பாக, தென் மாவட்டங்களில் தன் தரப்பை பலப்படுத்த அமமுக நிர்வாகிகளை தம் அணிக்கு இழுக்க மாஜிக்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்தார் ஈபிஎஸ்.
தென் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்ட 'ஆபரேஷன் அமமுக' ஃபெயிலியர் ஆன நிலையில், 2 மாவட்ட செயலாளர்களை கொத்தாக தூக்கி தினகரனுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சி.வி.சண்முகம்.

ஈபிஎஸ் ஆலோசனை
அதிமுகவில் தொடர்ந்து நிலவி வரும் குழப்பமான சூழலுக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து, சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். விரைவில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி அணியினர் தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கிறார்.

சவுத் ஆபரேஷன்
இதற்கிடையே தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் செல்வாக்கைச் சரிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை என்பதில் ஈபிஎஸ் அப்செட்டில் இருந்தார். இந்த நிலையில் தான், அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமமுகவினரை வளைக்கும் ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால், தென்னக முகமாக தான் முன்னிறுத்திய மாஜி அமைச்சர் மீது அதிருப்தி அடைந்தார் ஈபிஎஸ்.

ஈபிஎஸ் அணியில்
இந்நிலையில் தான் சத்தமில்லாமல் காய் நகர்த்தி, சாதித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் முயற்சியில், அமமுக மாவட்டச் செயலாளர்கள் ஆர்.பாலசுந்தரம், ஆர்.அய்யனார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

முதலில் குடும்பம் இணையட்டும்
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலசுந்தரம், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டி.டி.வி.தினகரனின் கொள்கை பிடிக்காததால் கட்சியை வெளியேறி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம். அதிமுகவை ஒன்றிணைப்பது இருக்கட்டும்; முதலில் அவர்களது குடும்பம் ஒன்றிணையட்டும். அமமுகவில் என்னைப் போல் பேச முடியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி அமமுக கட்சியை ஆரம்பித்துவிட்டு இப்போது வேறு மாதிரி பேசி வருகிறார் தினகரன் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

கொள்கை மாறிவிட்டார்
எத்தனை ஆண்டுகள் சிறை சென்று வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லிவிட்டு தற்போது அவரது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் டிடிவி தினகரன். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்ன ஓபிஎஸ்ஸுடன் நட்பு பாராட்டி ஒன்றிணைவோம் என்று கூறுகிறார் டி.டி.வி.தினகரன், அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாததால் அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது என அமமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோட்டை விட்ட தினகரன்
2 மாவட்ட செயலாளர்களே கட்சி மாறியிருப்பது அமமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்குப் பிறகு, டிடிவி தினகரன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்து, பாஜக கூட்டணிக்கு தயாராகி வருவதும், சசிகலா, தினகரன் இடையே பனிப்போர் தொடர்வதும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரத்தில் 2 மா.செக்களை அமமுக இழந்திருப்பது தினகரனுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அமமுக பஞ்சர்
இதற்கிடையே, மற்ற மாவட்டங்களிலும், அமமுகவினரை இழுக்கும் ஆபரேஷனை தீவிரப்படுத்த ஈபிஎஸ் உத்தரவிட்டிருக்கிறாராம். அமமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக நிர்ப்பந்தித்து வரும் சூழலில், அமமுகவை பஞ்சராக்கி, அக்கட்சியை கழற்றி விட்டு விடவேண்டும் என்பதுதான் ஈபிஎஸ்ஸின் திட்டம் என்கிறார்கள். விழுப்புரத்தில் கட்சியினரை கோட்டை விட்ட தினகரன், தனது பலத்தைத் தக்கவைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications