முதல்வருடன் பேசினேனா.. நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்..பழனிச்சாமி தயாரா? - ஓபிஎஸ் சவால்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் நான் அரைமணி நேரம் தனியாக பேசியதாக பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அப்படி நிரூபிக்க முடியாத பட்சத்தில் பழனிச்சாமி அரசியலை விட்டு விலகுவாரா என்றும் ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவரது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி இனி செல்லாது என கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்டது.
சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரை மணி நேரம் பேச்சு
கைது செய்யப்பட்ட பின்னர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபை முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசியதாக குற்றம் சாட்டினார்.

முதல்வர் முயற்சி பலிக்காது
அதிமுக கட்சி முடிவுகள் மற்றும் பொருப்பாளர்கள் பட்டியல் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்த போதும் அதை மீறி ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை அழிக்க முதல்வர் செய்யும் முயற்சிகள் பலிக்காது என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வத்திடம், நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டம் உங்களை எதிர்த்து நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ.பன்னீர் செல்வமோ, அது என்னை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாக நான் நினைக்கவில்லை என்று கூறினார்.

அரசியலை விட்டு விலகத்தயார்
தொடர்ந்து ஒ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், நீங்களும் முதல்வர் ஸ்டாலினும் அரை மணி நேரம் தனி அறையில் பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு முன்வைத்துள்ளாரே என்று கேட்டனர். அதற்கு அவரோ, அப்படி நான் பேசியதாக பழனிச்சாமி நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறே என்று சொன்னார். பழனிச்சாமியால் நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலை விட்டு விலகுவாரா என்றும் சவால் விட்டார்.

பழனிச்சாமி என்று சொன்ன ஓபிஎஸ்
நேற்றைய தினம் பேட்டியின் போது ஓபிஎஸ் என்று சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வம் தனது பேட்டியின் போது பழனிச்சாமி என்று கூறினார். எவ்வளவுதான் பிரச்சினை என்றாலும் இருவரும் அண்ணன் என்று சொல்லி பெயரை சொல்வர்கள். இப்போது மோதல் முற்றியுள்ளதால் இருவரும் பெயரை குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.

ஒன்றுபடுமா அதிமுக
பொன்விழா கொண்டாடிய அதிமுக தற்போது பிளவுபட்டு கிடக்கிறது. கட்சிக்கு தலைமை யார் என்ற பிரச்சினைதான் பிளவுக்கு காரணம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினருக்குத்தான் கொண்டாட்டமாக உள்ளது. யார் தலைவர் என்பதிலேயே இத்தனை சிக்கல் நீடிப்பதால் நிர்வாகிகள் பலர் மாற்று கட்சியை நாடத் தொடங்கியுள்ளனர். ஈகோவை கை விட்டு ஓபிஎஸ், இபிஎஸ் ஒன்றிணைந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை ருசிக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications